

நியூயார்க்: வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா வழிமொழிந்தது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்கின.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க ராணுவ நிலைகள் உள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகள் மற்றும் ஜோர்டான் மீதான ஈரான் தாக்குதல்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்தும் ஈரானின் அனைத்து தாக்குதல்களையும் உடனே நிறுத்தக் கோரியும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதை பஹ்ரைன் முன்னெடுத்தது.
இத்தீர்மானத்தை ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, வங்கதேசம், பூடான், கனடா, எகிப்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 134 நாடுகளுடன் இணைந்து இந்தியா வழிமொழிந்தது. இறுதியாக நடந்த வாக்கெடுப்பில் பாதுகாப்பு கவுன்சலில் 15 உறுப்பு நாடுகளில் 13 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.
நிரந்தர உறுப்பு நாடுகளான சீனாவும் ரஷ்யாவும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன. இதையடுத்து இத்தீர்மானம் நிறைவேறியது.. இதற்கிடையில் ஈரானில் நடந்து வரும் போரினால் 3.2 மில்லியன் மக்கள் வரை இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரும்பாலானோர் டெஹ்ரான் மற்றும் பிற முக்கிய நகரங்களிலிருந்து நாட்டின் வடக்கு அல்லது கிராமப்புறங்களை நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக அந்த அமைப்பு கூறியது.