பிரதமர் மோடியின் ‘ராஜதந்திரம்’ - ட்ரம்ப் அதிரடிகளைத் தகர்க்கும் வியூகங்கள்!

‘தி நியூயார்க் டைம்ஸ்’ சொல்வது என்ன?
பிரதமர் மோடியின் ‘ராஜதந்திரம்’ - ட்ரம்ப் அதிரடிகளைத் தகர்க்கும் வியூகங்கள்!
Updated on
4 min read

சர்வதேச அரசியல் களத்தில் யாருக்கும் அடிபணியாத ஒரு சுயசார்பு சக்தியாக ‘இந்தியா’ உருவெடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கணிக்க முடியாத வணிகக் கட்டுப்பாடுகளும், வரி கெடுபிடிகளும் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. உலக வர்த்தகத்தில் அமெரிக்காவின் இந்தத் தன்னிச்சையான வரி கெடுபிடிகள், இந்திய ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.

இந்த நிதி நிலையற்ற தன்மையைக் குறைக்க, இந்தியப் பொருளாதாரம் தனது ஏற்றுமதிச் சந்தைகளைப் பன்முகப்படுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, அதிபர் ட்ரம்ப்பின் ‘அமெரிக்க முதன்மை’ கொள்கை ஏற்படுத்திய அதிர்வுகளால், பிரதமர் நரேந்திர மோடி ‘ஹெட்ஜிங்’ (Hedging) எனப்படும் ‘ஆபத்தைக் குறைக்கும் யுத்தி’யைக் கையாளத் தொடங்கியுள்ளார் என்று அமெரிக்காவில் இருந்து வெளிவரும் சர்வதேச நாளேடான ‘தி நியூயார்க் டைம்ஸ்’ சிறப்பு செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா முக்கியமானது; ஆனால், அதை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது. அமெரிக்காவை மட்டுமே முழுமையாகச் சார்ந்து இருக்காமல் ஐரோப்பா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் கைகோப்பதன் மூலம், அமெரிக்க வரி விதிப்புகளால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்பை இந்தியா முன்கூட்டியே தடுத்து வருகிறது.

உலகப் பொருளாதார நிலையின்மையில் இலிருந்து இந்தியாவைக் காக்கும் ஒரு ராஜதந்திரப் பிரதமராக மோடி செயல்படுகிறார். இதற்காகவே, அவர் உலக நாடுகளுடன் தனித்தனி ஒப்பந்தங்களைச் செய்து இந்தியாவின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதிசெய்து வருகிறார்.

‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு குறிப்பிடுகையில், ‘பிரதமர் மோடி கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து குறைந்தபட்சம் 20 நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். இந்தச் சுற்றுப் பயணங்கள் முக்கியமாக உறுதியான பொருளாதார, ராஜதந்திர ரீதியிலான முடிவுகளையும் ஒப்பந்தங்களையும் பெறுவதாகவே அமைந்திருந்தன. அதிபர் ட்ரம்ப் அவ்வப்போது கட்டவிழ்த்துவிடும் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் பரந்த புவிசார் அரசியல் பதற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க, தனது நட்பு நாடுகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்த இந்தியா முயன்று வருகிறது’ என்று தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி சமீபத்தில் கிர்கிஸ்தான் நாட்டுக்கு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்தபோது, இந்த ஆய்வுக் கட்டுரையை அந்நாளேடு வெளியிட்டிருந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரையும் சந்தித்துப் பேசியது உலக அரசியலில் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்பட்டது.

உறுதியான பொருளாதாரப் பலன்கள்

‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளேட்டுக்கு மகாராஷ்டிர அரசின் ‘எதிர்காலப் பொருளாதார ஒத்துழைப்பு மன்றத்தின்’ நிர்வாக இயக்குநர் பிரியம் காந்தி அளித்த பேட்டியில், “பிரதமர் மோடி சமீபத்தில் வெளிநாடுகளுக்குச் சென்ற பயணங்கள் மூலம் உறுதியான பொருளாதாரப் பலன்கள் இந்தியாவுக்குக் கிடைத்து இருக்கின்றன.

குறிப்பாக, ஜெர்மனியுடன் நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பக் கூட்டு, பிரான்ஸில் மாணவர்களுக்கு விசா எளிதாகக் கிடைக்க முயற்சி, இந்தியா - பிரிட்டன் ஒப்பந்தத்தால் ஸ்காட்ச் விஸ்கி மீதான வரிக்குறைப்பு ஆகியவை நடந்துள்ளன. நமது பொருளாதாரத்தின் அளவு வளரும்போது, உலகின் பிறநாடுகளுடன் சிறந்த உறவுகளை வளர்க்க விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா ‘பலதரப்பு’ (Plurilateral) அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட இலக்கு எட்டப்படும் வரை, சிறிய மற்றும் துல்லியமாக வரையறுக்கப்பட்ட இலக்குகளை வைத்துக்கொண்டு, குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளுடன் இணைந்து செயல்படும் முறை இதுவாகும்.

நடுத்தர வல்லரசுகளுடன் கைகோத்தல்

‘நடுத்தர வல்லரசுகள்’ என்று சொல்லப்படும் பிரான்ஸ் மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகள், இந்தியா எதிர்கொள்ளும் அதே சூழல்நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இருபெரும் வல்லரசுகளுக்கு இடையிலான மோதலில் சிக்காமல் இருக்க, இந்தியா ‘நடுத்தர வல்லரசுகளுடன்’ தன் உறவை வலுப்படுத்தி வருகிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் திடீர் கொள்கை மாற்றங்களால் ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகள் இந்தியாவைப் போலவே பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளன. இந்த நாடுகளுடன் இணைந்து ‘விநியோக சங்கிலி’யை (Supply Chain) உருவாக்குவதன் மூலம், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் ஆதிக்கத்தையும் ஒரே நேரத்தில் இந்தியா சமாளிக்கிறது.

பிரதமர் மோடியின் அணுகுமுறையால், நடுத்தர வல்லரசுகளை முடக்கும் சில சக்திகள் இந்தியாவுக்குச் சாதகமாகச் செயல்படத் தயாராக உள்ளன. இதற்குக் காரணம், இந்தியாவின், மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரச் சந்தையை அணுகவும், தங்கள் சொந்த ராஜதந்திரத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உலகத் தலைவர்கள், பிரதமர் மோடியை நாடி வருவதாக அந்தச் செய்தி தெரிவித்துள்ளது.

இந்தியா மீது 25% வரி

ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது உக்ரைன் மீதான போருக்கு நிதியுதவி அளிப்பதாகக் கூறி, கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத இறக்குமதி வரியை அதிபர் ட்ரம்ப் விதித்தார்.

இந்தியாவின் உள்நாட்டுத் தொழிலைப் பாதுகாக்கும் பொருளாதாரக் கொள்கையை ட்ரம்ப் நிர்வாகம் விமர்சித்தது. ஆனால், இந்தியா சற்றும் தளரவில்லை; அதன் வெளியுறவுக் கொள்கை அணுகுமுறையில் செய்யப்பட்ட மாற்றங்கள் வெளிப்படத் தொடங்கின என்று ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மனமாற்றம் பின்னணி

முதல்முறை அமெரிக்க அதிபராக ட்ரம்ப் இருந்தபோது, பிரதமர் மோடியுடன் தனிப்பட்ட முறையில் அவர் நட்புறவு வைத்திருந்தார். ஆனால், 2025-ம் ஆண்டு மே மாதத்தில் இந்தியா - பாகிஸ்தான் நடந்த 4 நாள் போரை அவர்தான் முடிவுக்குக் கொண்டு வந்ததாக அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறிவந்ததை அடுத்து, மத்தியில் ஆளும் பாஜக அரசின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது.

இந்தியாவின் மிகப் பெரிய ஒற்றை ஏற்றுமதிச் சந்தையாக அமெரிக்கா இருந்து வருவதால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்பைக் குறைக்க இந்தியா அடுத்தகட்ட முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவைக் கட்டுப்படுத்த விரும்பும் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடனான உறவுகளை இந்தியா வலுப்படுத்தி வருகிறது. இதற்காக, புதிய நட்பு நாடுகளை அரவணைக்கும் முயற்சியை இந்தியா விரிவுபடுத்தியுள்ளது.

இதனிடையே, அமெரிக்கா - ஈரான் போர் இந்தியாவின் இந்த முயற்சியை மேலும் விரைவுபடுத்தும் நிர்பந்தத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 80 சதவீதம் ஹார்முஸ் நீரிணை வழியாகவே வருவதால், மாற்றுப் போக்குவரத்துப் பாதைகளைக் கண்டறிய வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது என ‘தி நியூயார்க் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.

பயணச் செலவும் அந்நிய நேரடி முதலீடும்

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காகக் கடந்த 2021-ம் ஆண்டிலிருந்து மத்திய அரசு ரூ.550 கோடி செலவிட்டுள்ளதாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-ம் ஆண்டில் பிரதமர் மோடி அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ஜப்பான் உள்ளிட்ட 23 நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார்; இதற்காக ரூ.180 கோடியை மத்திய அரசு செலவிட்டுள்ளது. 2026-ம் ஆண்டில் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக இதுவரை ரூ.74.58 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கரிட்டா தெரிவித்துள்ளார். இதில் சமீபத்தில் பிரதமர் மோடி மத்திய ஆசிய நாடுகளுக்குச் சென்ற செலவு குறிப்பிடப்படவில்லை.

2021-ம் ஆண்டு ஜூலை முதல் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் 316 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. 2021 ஏப்ரல் முதல் 2025 டிசம்பர் வரையிலான காலத்தில், பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களின் விளைவாக இந்தியாவுக்கு 381.80 பில்லியன் டாலர்கள் நேரடி அந்நிய முதலீடாக (FDI) வந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து பிரதமர் மோடி 18 நாடுகளுக்குப் பயணித்துள்ளார். 13 நாடுகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். இந்த வருகைகளின்போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன என்று ‘தி நியூயார்க் டைம்ஸ்’ குறிப்பிட்டுள்ளது.

கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்கள்

பிரான்ஸ்: செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நிர்வாகத்தில் நெருங்கிய ஒத்துழைப்பும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவதையும் மையமாகக் கொண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

நார்வே (EFTA): கடந்த அக்டோபரில் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்துடன் இந்தியா மேற்கொண்ட ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவில் பத்து லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க நார்வே உறுதி அளித்தது. இதை பிரதமர் மோடியும் நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரேவும் உறுதிபடுத்தினர்.

தென் கொரியா: தென்கொரிய அதிபர் லீ ஜே-மியுங் இந்தியாவில் முதலீடு செய்யவும், கப்பல் கட்டுமானத் துறையில் உதவவும் பிரதமர் மோடியிடம் உறுதியளித்தார். 2047-ம் ஆண்டுக்குள் உலகின் முன்னணி ஐந்து கப்பல் கட்டுமான நாடுகளில் ஒன்றாகத் திகழ இந்தியா இலக்கு கொண்டுள்ளது.

நியூசிலாந்து: கடந்த 40 ஆண்டுகளில் நியூசிலாந்துக்குப் பயணம் செய்த முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றார். கடல்சார் பாதுகாப்பை உறுதிசெய்வது, கடந்த ஆண்டு செய்யப்பட்ட பாதுகாப்புக்கூட்டை வலுப்படுத்துவது, இருதரப்பு வர்த்தக இலக்கை இருமடங்காக ஆக்குவது ஆகியவை இரு நாட்டுப் பிரதமர்களின் நோக்கமாகும்.

ஐரோப்பிய ஒன்றியம் (EU): கடந்த ஜனவரி மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திட்டது. ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக நடைபெற்றுவந்த வர்த்தகப் பேச்சுவார்த்தை இதன் மூலம் முடிவை எட்டியது.

இந்தியாவின் முன்னுரிமைகளை, பாதுகாப்புத் தொழில் நுட்பம், பிராந்தியப் பாதுகாப்பு, எரிசக்தி இறக்குமதி, அரிய கனிமங்கள், செயற்கை நுண்ணறிவு என வகைப்படுத்தலாம் என ‘நியூயார்க் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.

வர்த்தகக் கொள்கையில் மாற்றம்

‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளேட்டின் செய்தி குறிப்பிடுகையில், ‘உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், இந்தியாவின் வளர்ச்சியை வேகப்படுத்தும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கும் ஆதரவு தேவை என்பது பல ஒப்பந்தங்களில் அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய வீரியம் குறைந்த ஜெனரிக் மருந்து உற்பத்தியாளராக இந்தியா இருந்து வருவதால், அதன் மருந்துகளுக்குப் புதிய வாங்கும் நாடுகளைக் கண்டறிவதற்கும், உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் பிற நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

உலகத் தலைவர்களுடன் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் குறிப்பிட்ட இலக்குகள் மற்றும் எண்ணிக்கைகளுடன் கவனமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘இந்தியா நீண்டகாலமாகக் கடைப்பிடித்துவந்த பாதுகாப்புக் கொள்கையிலிருந்து (Protectionism) விலகி, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன் காரணமாக, ஐரோப்பிய கார்கள் மற்றும் ஒயின் உள்ளிட்ட பொருட்களின் மீதான வரிகளைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டது. குறிப்பாக 2025-ம் ஆண்டில், இந்தியா - பிரிட்டன் இடையிலான ஒப்பந்தத்தின்படி, ஆடைகள் மற்றும் மதுபானங்கள் மீதான வரிகளைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா - அமெரிக்க உறவு நிலை

இந்தியா - அமெரிக்க உறவு குறித்து லண்டனைச் சேர்ந்த ‘சாத்தம் ஹவுஸ்’ (Chatham House) தெற்காசிய அரசியல் ஆய்வு வல்லுநர் சேத்ஜி பாஜ்பாய் அளித்த பேட்டியில், “இந்தியா - அமெரிக்க உறவு தற்போது நிலையில்லாத ஊசலாட்டத்திலும், நீண்டகால இலக்குகள் இன்றியும் இருக்கிறது. சிறிய நாடுகளுடனும், நடுத்தர வல்லரசுகளான கனடா, ஜப்பான் போன்ற நாடுகளுடனும், வல்லரசுகளான அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுடனும் தனது உறவைச் சமநிலைப்படுத்தி நிர்வகிக்கும் ராஜதந்திரத்தை இந்தியா மீண்டும் பின்பற்றுகிறது” என்று குறிப்பிட்டார்.

எந்த நாட்டுடனும் தனது தனிப்பட்ட இணக்கமான உறவை வெளிப்படுத்திக் கொள்வதில் பிரதமர் மோடி தயக்கம் காட்டுவது இல்லை. உதாரணமாக, இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியைச் சந்தித்தபோது, மோடி அவருக்கு இந்தியாவில் பிரபலமான ‘மெலடி’ (Melody) டாஃபி மிட்டாய் பாக்கெட் ஒன்றை பரிசளித்தார். அன்றைய தினமே, ‘மெலடி’ சாக்லேட் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயரைப் போன்றே இருந்த வேறொரு நிறுவனத்தின் பங்குகள் இந்தியப் பங்குச்சந்தையில் உயர்ந்தன என்று ‘தி நியூயார்க் டைம்ஸ்’ சுவாரசியமாகத் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் ‘ராஜதந்திரம்’ - ட்ரம்ப் அதிரடிகளைத் தகர்க்கும் வியூகங்கள்!
‘iPhone Duo’ - ஆப்பிளின் முதல் ஃபோல்டபிள் போன் சந்தையில் அறிமுகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in