

அடிஸ் அபாபா: பிராந்திய அமைதி, ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் இந்தியாவும் எத்தியோப்பியாவும் இயல்பான கூட்டாளிகள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி கடந்த செவ்வாய்க்கிழமை எத்தியோப்பியாவுக்கு முதல்முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்று உரையாற்றினார். பிரதமர் இதுவரை உலகளவில் 17 நாடுகளின் நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ள நிலையில், இது அவருக்கு 18-வது நாடாளுமன்ற உரையாகும்.
எத்தியோப்பிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: எத்தியோப்பியா ஆப்பிரிக்காவின் முக்கிய நுழைவாயிலாக உள்ளது. அதேசமயம், இந்தியப் பெருங்கடலின் இதயமாக இந்தியா உள்ளது. இந்த நிலையில், பிராந்திய அமைதி, ஒருங்கிணைப்பு, பாதுகாப்பு ஆகியவற்றில் நாங்கள் இயல்பான கூட்டாளிகளாக செயல்படுகிறோம்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம் பரஸ்பர ஒத்துழைப்புக்கான எங்களது அர்ப்பணிப்பு மேலும் வலுப்பெற்றது. ராணுவ ஒத்துழைப்பில் இன்னும் நெருக்கமாக செயல்பட இந்த ஒப்பந்தம் வழிவகுத்துள்ளது.
காலநிலை மற்றும் உணர்வு ரீதியாக ஒருமித்த தன்மையை இருநாடுகளும் பகிர்ந்து கொள்கின்றன. இருநாடுகளின் மூதாதையர்கள் பொருட்களை மட்டுமின்றி கருத்துகளையும், வாழ்க்கை முறைகளையும் பரிமாறிக் கொண்டனர்.
எத்தியோப்பியாவில் பல்வேறு துறைகளில் இந்திய நிறுவனங்கள் ரூ. 45,000 கோடிக்கும் அதிகமாக (5 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடு செய்து, 75,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. இந்த நிலையில், இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.