

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகளை ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பி.ஸ்ரீதர் நன்கொடையாக வழங்கினார்.
ஹைதராபாத்தை சேர்ந்த வெர்ட்டிகல் குளோபல் எனும் நிறுவனத்தின் இயக்குநரான பி.தர் நேற்று திருமலையில் தனது குடும்பத்தாருடன் இணைந்து அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடுவை சந்தித்தார். அப்போது ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகளை அவரிடம் ஒப்படைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பி.ஸ்ரீதர் கூறுகையில், “திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்துகின்றனர். இதில் ஒருவருக்கு பாதி பிளேடு வீதம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு திருப்பதி தேவஸ்தானம் ஆண்டுக்கு ரூ.1.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது.
இதனால் எனது நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ‘சில்வர் மேக்ஸ்’ பாதி பிளேடுகளை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கி உள்ளேன். உலகிலேயே எனது நிறுவனம் தான் முதன்முதலில் பாதி பிளேடுகளை தயாரித்து விற்பனை செய்கிறது.
பாதி பிளேடுகள் விற்பனை அமெரிக்கா, ஐரோப்பா உட்பட 52 நாடுகளில் புகழ்பெற்று விளங்குகிறது. பிரபல ‘7 ஓ கிளாக்’ பிளேடுகளையும் எங்கள் தொழிற்சாலையில் தான் தயாரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.