

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் நேற்று தொலைபேசியில் 40 நிமிடங்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர். அப்போது அமெரிக்கா - ஈரான் போர் குறித்தும், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பது குறித்தும் இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடி தரும் வகையில் வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தம் செய்ய பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்தது. இதனால் 2 வார காலம் இடைக்கால போர் நிறுத்தம் அமலானது. இந்த போர் நிறுத்தம் 21-ம் தேதியுடன் முடிகிறது. அதற்குள் நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட பல்வேறு தரப்பினர் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா, ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இது தோல்வியடைந்தது. இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தியை முடக்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். இதனால் மேற்காசியாவில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு முக்கியத்துவம்: அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் நாடுகளுடன் இந்தியாவுக்கு மிக நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. 3 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேரடி தொடர்பில் உள்ளார். இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த பிறகு ரஷ்யா, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் சமரச முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் இந்திய பிரதமருடன் அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்க அதிபரும் எனது நண்பருமான டொனால்டு ட்ரம்ப் தொலைபேசியில் அழைத்தார். அப்போது பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசித்தோம். சர்வதேச விவகாரங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து உறுதி மேற்கொண்டோம். மேற்கு ஆசியா நிலவரம் குறித்தும் (அமெரிக்கா- ஈரான் போர்) ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான, தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தினோம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் டெல்லியில் நேற்று கூறும்போது, ‘‘அமெரிக்கா, ஈரான் இடையிலான மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. அந்த நாடுகளின் சமரச முயற்சியை அமெரிக்கா வரவேற்கிறது. இதேபோல இந்தியாவின் சமரச முயற்சியையும் நாங்கள் முழுமனதுடன் வரவேற்கிறோம்.
அதிபர் ட்ரம்பும் பிரதமர் மோடியும் செவ்வாய்க்கிழமை 40 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஈரான் போர் மற்றும் இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது’’ என்றார். கடந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, அமெரிக்கா முன்வைத்த சில நிபந்தனைகளை ஈரான் ஏற்கவில்லை என்பதால் சுமூக முடிவு எட்டப்படவில்லை என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்தார். ஆனால், பேச்சுவார்த்தை தோல்வி அடைய அமெரிக்கா தான் காரணம் என ஈரான் குற்றச்சாட்டு வைத்திருந்தது.
இந்நிலையில் அண்மையில் பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிப் செய்தியாளர்களிடம் கூறும் போது, “விரைவில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை எதிர்நோக்குகிறோம். மேலும், இவை எல்லாம் இறைவனிடம் இருக்கிறது” என தெரிவித்தார். இந்தச் சூழ்நிலையில் ஈரான் - அமெரிக்கா இடையே 2-வது சுற்றுப் பேச்சுவார்த்தை நாளை (ஏப்ரல் 16) முதல் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தைக்கான இடம் மற்றும் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை எனினும், நாளை பேச்சுவார்த்தை நடைபெறும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.