

ஜோகன்னஸ்பர்க்: ‘‘பெருந்தொற்று, இயற்கை பேரிடர் சவால்களை எதிர்கொள்ள சர்வதேச சுகாதார குழுவை அமைப்பது அவசியம்’’ என்று ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி20 உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. அந்த நாட்டு அதிபர் சிரில் ராமபோசா மாநாட்டை தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது, “பேரிடர் கால மீட்பு நடவடிக்கைகளில் ஜி20 உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
வருவாய் குறைந்த நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் தாராளமாக கடன் உதவிகளை வழங்க வேண்டும். அரிய வகை தனிமங்கள் அனைத்து நாடுகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: உலக பொருளாதார வளர்ச்சியில் ஜி20 அமைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உணவு பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் பொருளாதாரம், புதுமை கண்டுபிடிப்புகள், பெண்கள் முன்னேற்றம், சுற்றுலாத் துறைகளில் ஜி20 நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இந்திய மக்கள் இயற்கையோடு இணைந்து வாழ்கின்றனர். இந்த வாழ்வியல் நடைமுறைகளை ஒன்றிணைக்க ஜி20 அமைப்பு சார்பில் சர்வதேச பாரம்பரிய அறிவுசார் மையம் தொடங்க வேண்டும். இதன்மூலம் இயற்கையை பாதுகாக்க முடியும்.
ஆப்பிரிக்க மக்களுக்கு திறன்சார் பயிற்சி அளிக்க ஜி20 திறன்சார் மையம் அமைக்க வேண்டும். இதற்கு ஜி20 உறுப்பு நாடுகள் நிதியுதவி, தொழில்நுட்ப உதவிகளை வழங்க வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில் ஆப்பிரிக்க நாடுகளில் 10 லட்சம் திறன்சார் பயிற்சியாளர்களை உருவாக்க வேண்டும். இதன்மூலம் ஆப்பிரிக்க நாடுகள் வளர்ச்சி அடையும்.
சர்வதேச அளவில் பெருந்தொற்றுகள், இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகிறோம். இவற்றை எதிர்கொள்ள ஜி20 சர்வதேச சுகாதாரக் குழுவை அமைக்க வேண்டியது அவசியம். ஜி20 உறுப்பு நாடுகளை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் இந்த குழுவில் இடம்பெற வேண்டும். இதன்மூலம் சர்வதேச சுகாதார நெருக்கடிகள், இயற்கை பேரிடர்களை எளிதாக எதிர்கொள்ள முடியும்.
போதை கடத்தல் தடுப்பு: சர்வதேச போதைப் பொருட்கள் கடத்தல் மூலம் ஈட்டப்படும் வருவாய் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே போதைப்பொருள் கடத்தலை தடுக்க ஜி20 நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
தமிழ்ப் பாடலை ரசித்த பிரதமர் மோடி: ஜோகன்னஸ்பர்க் நகரில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரை வரவேற்கும் வகையில் ‘‘கங்கா அம்மா’’ என்ற தமிழ்ப் பாடலை தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற பாடகி குமாரி அம்பிகை பாடினார். இந்த பாடலை பிரதமர் மோடி மெய்மறந்து கேட்டு ரசித்து, கைத்தட்டி பாராட்டினார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “கங்கா மையா (அம்மா) தமிழ்ப் பாடலை கேட்டது மிகுந்த நெகிழ்ச்சியாக இருந்தது. தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினர் தங்கள் இதயங்களில் இன்றும் இந்தியாவை உயிர்ப்போடு வைத்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தமிழகம் உட்பட 11 மாநிலங்களை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் கலாச்சாரத்தின்படி பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.