

உஸ்பெகிஸ்தான் அரசு சார்பில் மிகச் சிறந்த வெளிநாட்டு தலைவர்களுக்கு, உயர்ந்த நிலை நட்பு என்ற பொருள்படும் ‘ஒலி தராஜலி தஸ்த்லிக்’ உயரிய விருது வழங்கப்படுகிறது. இந்த விருதைப் பிரதமர் நரேந்திர மோடிக்கு உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் நேற்று வழங்கி கவுரவித்தார். படம்: பிடிஐ
தாஷ்கண்ட்: உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவைப் பிரதமர் நரேந்திர மோடி தாஷ்கண்டில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, நீண்ட கால அடிப்படையில் யுரேனியம் சப்ளை, வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி உட்பட 11 துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டுவில் பிரதமர் மோடி , அந்த நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் இருவரும் நேற்று அதிகாரப்பூர்வமாகச் சந்தித்துப் பேசினர்.
அப்போது வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, கலாச்சாரம், உயர் கல்வி, அறிவியல் ஆராய்ச்சி, ஆயுர்வேதம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அகழ்வாராய்ச்சி, சுற்றுலா, கனிம வளம், புவியியல் ஆராய்ச்சி தொடர்பாக இரு நாடுகள் இடையே 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக நீண்ட கால அடிப்படையில் இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க உஸ்பெகிஸ்தானுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
பின்னர் பிரதமர் மோடியும் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: இந்தியா, உஸ்பெகிஸ்தான் இடையிலான ராஜ்ஜிய ரீதியிலான உறவு 15 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்த நேரத்தில் இரு நாடுகள் இடையிலான உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது. நீண்ட கால அடிப்படையில் இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க உஸ்பெகிஸ்தான் முன்வந்திருக்கிறது. இதற்கு தேவையான கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.
செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, அரிய வகை கனிமங்கள், மரபுசாரா எரிசக்தி, விண்வெளி, அணு சக்தி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையில் இந்தியா டிஜிட்டல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, விண்வெளி துறைகளில் அபார சாதனை படைத்து வருகிறது.
சர்வதேச அரங்கில் அனைத்து நாடுகளின் நன்மைக்காக இந்தியா தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. உஸ்பெகிஸ்தானில் மகாத்மா காந்தி மையம், லால் பகதூர் சாஸ்திரி மையம் ஆகியவை செயல்படுகின்றன. இதன்மூலம் இரு நாடுகள் இடையிலான கலாச்சார உறவு வலுவடைந்து வருகிறது. உஸ்பெகிஸ்தானின் மிகவும் நம்பகமான நட்பு நாடாக இந்தியா விளங்குகிறது.
இந்தியர்கள் விசா இல்லாமல் 30 நாட்கள் உஸ்பெகிஸ்தானில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. வர்த்தகம், சுற்றுலா துறைகளில் இரு நாடுகள் இடையிலான உறவு வலுவடைந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் தற்போது அணுசக்தி மூலம் 8.8 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. வரும் 2047-ம் ஆண்டுக்குள் அணுசக்தி மின் உற்பத்தியை 100 ஜிகாவாட்டாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, கஜகஸ்தான், துர்க்மேனிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து யுரேனியத்தை வாங்க ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது உஸ்பெகிஸ்தானிடம் யுரேனியத்தை வாங்க புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
உஸ்பெகிஸ்தானில் இருந்து நேற்று இரவு கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்குக்குப் பிரதமர் மோடி சென்றார். அங்கு இன்றும் நாளையும் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
இந்த மாநாட்டின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்கைப் பிரதமர் மோடி சந்தித்துப் பேசுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தாஷ்கண்டில் நேற்று காலை சிறப்பு யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று, உக்ரைன் மக்களுக்குப் பல்வேறு யோகாசனங்களைக் கற்றுக் கொடுத்தார். இதுதொடர்பான செல்பி வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
உஸ்பெகிஸ்தான் அரசு சார்பில் மிகச் சிறந்த வெளிநாட்டு தலைவர்களுக்கு ‘ஒலி தராஜலி தஸ்த்லிக்’ என்ற மிக உயரிய விருது வழங்கப்படுகிறது. இந்த விருதைப் பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் நேற்று வழங்கினார்.
இதுகுறித்து பிரதமர் மோடி பேசும்போது, “உஸ்பெகிஸ்தானின் மிக உயரிய விருதைப் பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இரு நாட்டு ஆழமான உறவுக்காக இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்” என்று தெரிவித்தார். அமெரிக்கா, ரஷ்யா உட்பட 35 நாடுகள் பிரதமர் மோடிக்கு ஏற்கெனவே மிக உயரிய விருதினை வழங்கி உள்ளன. இந்த வரிசையில் தற்போது உஸ்பெகிஸ்தான் அரசு 36-வது மிக உயரிய விருதினை வழங்கியிருக்கிறது.