“12 ஆண்டுகால பிரதமர் பணி என் வாழ்வின் மிகச் சிறந்த அனுபவம்!” - பாரிஸில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி

“12 ஆண்டுகால பிரதமர் பணி என் வாழ்வின் மிகச் சிறந்த அனுபவம்!” - பாரிஸில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி
Updated on
1 min read

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியில் ஆற்றிய உரையில், தொடர்ந்து 12 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராகப் பணியாற்றுவது தனது வாழ்வின் மிகச் சிறந்த மற்றும் மறக்க முடியாத அனுபவம் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

பாரிஸில் திரண்டிருந்த இந்தியர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, “இன்று உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் முன்னணிப் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது. இன்று, வங்கிச் சேவைகள் ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் கிடைக்கின்றன. கைபேசிகள் வழியாக, குடிமக்கள் இப்போது பலதரப்பட்ட சேவைகளையும் வாய்ப்புகளையும் எளிதாக அணுக முடிகிறது. தொழில்நுட்பம் மக்களுக்கு அதிகாரம் அளித்து, அன்றாட வாழ்க்கையை மேலும் வசதியாகவும் திறமையாகவும் ஆக்கியுள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “பாரிஸ் என்பது ஒளி, வண்ணங்கள், புதிய சிந்தனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளின் நகரம். இந்தியாவின் பலதரப்பட்ட கலாச்சார வளத்தைக் கொண்டு, இந்த நகரத்தின் துடிப்பான சூழலுக்கு இந்திய வம்சாவளியினர் மேலும் பெருமை சேர்த்துள்ளனர். பாரிஸ் நகரில் தமிழர்கள், பஞ்சாபியர்கள், குஜராத்திகள், மராத்தியர்கள் மற்றும் வங்காளிகள் என இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இந்திய வம்சாவளியினர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகரத்துக்குப் புதிய வண்ணங்களைக் கொண்டு சேர்த்துள்ளதோடு, இந்தியாவின் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற உன்னதத் தத்துவத்தின் பிரதிபலிப்பாகவும் விளங்குகின்றனர்” என்று பிரதமர் மோடி பேசினார்.

முன்னதாக, பிரான்சின் எவியன்-லெஸ்-பெய்ன்ஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பிரதமர் மோடி, அம்மாநாடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து புதன்கிழமை அன்று பாரிஸ் வந்தடைந்தார். பாரிஸ் விமான நிலையத்தில் அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தியா - பிரான்ஸ் இடையிலான வலுவான கூட்டாண்மை, உலகளாவிய முன்னேற்றம் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிப்பதாகப் பிரதமர் தெரிவித்தார். 

இதுகுறித்து பாஜக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பிரதமர் மோடியின் இந்த வருகை வெறும் சாதாரணப் பயணம் அல்ல; இது உலக அரங்கில் புதிய இந்தியாவின் எழுச்சியைக் காட்டுகிறது. உலகளாவிய முக்கிய விவாதங்களில் இந்தியா வெறும் பங்கேற்பாளராக மட்டுமன்றி, உலகிற்கு வழிகாட்டும் நாடாகவும் உயர்ந்துள்ளதை இந்த மாநாடு உணர்த்துகிறது" என்று பதிவிட்டுள்ளது.

“12 ஆண்டுகால பிரதமர் பணி என் வாழ்வின் மிகச் சிறந்த அனுபவம்!” - பாரிஸில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி
சிப் தட்டுப்பாட்டால் ஐபோன் உள்ளிட்ட கேட்ஜெட்களின் விலையை உயர்த்தும் ஆப்பிள் நிறுவனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in