

வாஷிங்டன்: அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் வளாகத்தில், பல தளங்கள் அவசரமாக மூடப்பட்டன. அங்கு பணியாற்றிய ஊழியர்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
வாஷிங்டனில் அமைந்துள்ள பென்டகன் கட்டிடத்தின் உட்புற பாதுகாப்பு அமைப்புகள், காற்றில் நச்சுத்தன்மை அல்லது அசாதாரண மாற்றம் இருப்பதை தானியங்கி முறையில் கண்டறிந்தன. இதைத் தொடர்ந்து, ஊழியர்களுக்கு அவசரக் காலப் பாதுகாப்பு நெறிமுறைகளின்படி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடையுமாறு உத்தரவிடப்பட்டது.
பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் இது குறித்து கூறுகையில், “கட்டிடத்தின் உள் அமைப்புகள் காற்றில் சில மாறுபாடுகளைக் கண்டறிந்தன. இதன் முக்கியத்துவத்தை முழுமையாக அறியும் வரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு நெறிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டன” என்று தெரிவித்தார். இந்தச் சோதனையின் போது பென்டகன் வளாகத்தின் 2 முதல் 5 வரையிலான தளங்களில், 4 முதல் 7 வரையிலான நடைபாதைகள் முற்றிலும் மூடப்பட்டன.
இந்த அவசர எச்சரிக்கையைத் தொடர்ந்து, தீயணைப்பு மற்றும் அவசர மருத்துவ சேவை துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், கட்டிடத்தின் பாதுகாப்புப் பிரிவு ஊழியர்களுக்கு அனுப்பிய செய்தியில், கூடுதல் காற்று பரிசோதனைகள் செய்யப்படுவதாகவும், இதற்கு ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை ஆகலாம் என்றும், வெளியில் நடக்கும் அவசரக் கால நடவடிக்கைகளைக் கண்டு அச்சப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
பாதுகாப்புப் படையினரின் தீவிர சோதனைக்குப் பிறகு அங்கு காற்றில் எந்தவொரு நச்சுப் பொருளோ அல்லது ரசாயன அச்சுறுத்தலோ இல்லை என்பது கண்டறியப்பட்டது. பென்டகனின் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் கருவிகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த எச்சரிக்கை மணி ஒலித்துள்ளதாக கூறப்படுகிறது.