

தெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போரின் தொடக்கத்தை காட்டிலும் இப்போது தங்கள் நாட்டின் படைகள் பலம் பெற்றுள்ளதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனை அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது அக்ராமினியா கூறியுள்ளார். இதனை ஈரான் அரசு செய்தி நிறுவனமான ஐ.ஆர்.என்.ஏ செய்தியாக வெளியிட்டுள்ளது.
“போரின் தொடக்கத்தை காட்டிலும் இஸ்லாமிய குடியரசின் ஆயுதப்படை இப்போது பலம் பெற்றுள்ளது. படை வீரர்கள் ஊக்கம், அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கையை பெற்றுள்ளனர். ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாடு ஈரான் வசம் உள்ளது. எங்களது நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்கும் வரையில் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் தொடரும்.
நாட்டின் உச்ச தலைவர் உத்தரவுக்கு இணங்க ஈரான் பாதுகாப்புப் படை விரைந்து செயல்படும். அதற்கு எந்தவித எல்லைக் கட்டுப்பாடுகளும் இல்லை” என்று முகமது அக்ராமினியா தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஈரானின் கெஷ்ம் தீவு (Qeshm) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. இதன் காரணமாக மேற்காசியாவில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்த தகவலை அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தியாக வெளியிட்டுள்ளது அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று. கெஷ்ம் தீவு, ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அன்று கூட்டு தாக்குதல் மேற்கொண்டது அமெரிக்காவும், இஸ்ரேலும். இதன் காரணமாக மேற்காசியாவில் போர் பதற்றம் ஏற்பட்டது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சரக்கு கப்பல் போக்குவரத்தும் முடங்கியது. இதனால் சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டது.
மேற்காசிய போர் காரணமாக அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் தீர்வு கிடைத்தால் அது உலக நாடுகளுக்கு நலன் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.