ஆஸி.யில் துப்பாக்கிச் சூடு நடத்திய சஜித் அக்ரம் ஓர் இந்தியர்? - அதிகாரிகள் தகவல்

போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உறவுகளை இழந்தவர்கள்.

போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உறவுகளை இழந்தவர்கள்.

Updated on
1 min read

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரில் ஒருவரான 50 வயது சஜித் அக்ரம் ஓர் இந்தியர் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச.14) மாலை யூதர்களை குறிவைத்து இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 யூதர்கள் உயிரிழந்தனர். இரண்டு போலீஸ் அதிகாரிகள், பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலை நடத்திய இருவரில் ஒருவரான சஜித் அக்ரம் (50), காவல் துறையினர் நடத்திய பதில் தாக்குதலில் உயிரிழந்தார். மற்றொரு நபரான நவீத் அக்ரம் (24), காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சஜித் அக்ரமின் மகன்தான் நவீத் அக்ரம் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இவர்களில் சஜித் அக்ரம் என்பவர் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தைச் பூர்விகமாகக் கொண்டவர் என்று ‘தி இந்து’ ஆங்கில நாளிதழிடம் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பட்டப்படிப்பு முடித்த பிறகு 1998-ல் மாணவர் விசாவில் ஆஸ்திரேலியா சென்ற சஜித் அக்ரம், அங்கு ஐரோப்பியர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். எனினும், இந்திய பாஸ்போர்ட்டையே அவர் பயன்படுத்தி வந்துள்ளார். இவரது மகனான நவீத் அக்ரம், ஆஸ்திரேலியாவில் பிறந்து அந்நாட்டு குடியுரிமையைக் கொண்டுள்ளார்.

சஜித் அக்ரம் ஓர் இந்தியர் என்றபோதிலும், அவர் 1998-க்குப் பிறகு இரண்டு மூன்று முறை மட்டுமே இந்தியா வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவரது தந்தை 2017-ல் இறந்தபோதுகூட அவர் வரவில்லை என கூறப்படுகிறது. அவர் கடைசியாக 2022-ல் ஹைதராபாத் வந்துள்ளாராம்.

சஜித் அக்ரமின் நெருங்கிய உறவினர்கள் பலரும் ஹைதராபாத்தில் வசிக்கிறார்கள். அவரது மூத்த சகோதரர் ஒரு மருத்துவர் என்றும், மறைந்த அவரது தந்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் ராணுவத்தில் பணியாற்றி 1984-ல் ஓய்வு பெற்றவர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சஜித் அக்ரம் குறித்த தகவல்களை திரட்ட ஆஸ்திரேலிய அதிகாரிகள், இந்திய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சஜித் அக்ரம் தனது மகன் நவீத் அக்ரமுடன் கடந்த மாதம் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குச் சென்றுள்ளார். சிட்னியில் இருந்து பிலிப்பைன்ஸுக்கு ஒன்றாக வந்ததாக அந்நாட்டின் பாஸ்போர்ட் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சஜித் அக்ரம் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியானது. உண்மையில், அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறித்து செய்தியாளர்கள் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸிடம் இன்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘‘அந்த விவரங்களுக்குள் நான் செல்ல முடியாது. அவ்வாறு சொல்வது விசாரணையை பலவீனப்படுத்துவதாக அமைந்துவிடும். அவ்வாறு சொல்வது பொருத்தமானதாக இருக்காது’’ என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உறவுகளை இழந்தவர்கள்.</p></div>
2014 முதல் நாட்டுக்குள் ஊடுருவிய 23,926 பேர் கைது: மத்திய அரசு தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in