

புதுடெல்லி: கடந்த 2014-ம் ஆண்டு முதல் இதுவரை இந்தியாவுக்குள் ஊடுருவியதாக 23,926 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்களான ஜகதீஷ் சந்திர பர்மா பசுனியா மற்றும் ஷர்மிளா சர்க்கார் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், “2014 முதல் 2024 வரை வங்கதேசம், மியான்மர், பாகிஸ்தான், நேபாளம் - பூடான் ஆகிய நாடுகளுடனான எல்லைகள் வழியாக இந்தியாவுக்குள் 20,806 பேர் ஊடுருவியுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை 3,120 பேர் ஊடுருவியுள்ளனர்.
இதில் அதிகபட்சமாக இந்திய - வங்கதேச எல்லைகள் வழியாக ஊடுருவியதாக 18,851 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து இந்தியா - மியான்மர் எல்லை வழியாக 1,165 பேர் ஊடுருவியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியா - பாகிஸ்தான் எல்லை வழியாக 556 பேரும், நேபாளம் - பூடான் எல்லைகள் மூலமாக 234 பேரும் இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டைப் பொறுத்தவரை வங்கதேசத்தில் இருந்து 2,556 பேரும், மியான்மரில் இருந்து 437 பேரும், பாகிஸ்தானில் இருந்து 49 பேரும், நேபாளம் மற்றும் பூடானில் இருந்து 78 பேரும் இந்தியாவுக்குள் ஊடுருவியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், 2014 முதல் இதுவரை இந்திய - சீன எல்லைகள் வழியாக யாரும் இந்தியாவுக்குள் ஊடுருவியதாக கைது செய்யப்படவில்லை. இந்தியாவின் வடக்கு எல்லையில் ஒரு தனித்துவமான பாதுகாப்பு சூழல் இருப்பதையே இது காட்டுகிறது’’ என நித்தியானந்த ராய் தெரிவித்துள்ளார்.