

முசாபராபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 53 தொகுதிகளில் 12 தொகுதிகள், இந்திய காஷ்மீரில் இருந்து குடியேறியவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இதற்கு ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அங்கு கோதுமைமாவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும், மின் கட்டணமும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்த பிரச்சினைகளை முன்னிறுத்தி ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்கள் கடந்த ஜூன் முதல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ராவலாகோட் நகரில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் 4 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். 35-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கடந்த ஜூன் முதல் இதுவரை 153 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் மற்றும் ஒருங்கிணைந்த அவாமி செயல் குழுவின் மூத்த தலைவர்கள் கூறியதாவது:
இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் பாலஸ்தீனத்தின் காஸா பகுதி நரகமாக மாறியிருக்கிறது. தற்போது பாகிஸ்தான் ராணுவம், இஸ்ரேல் ராணுவ பாணியில் கொடூர தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இதன்காரணமாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி காசாவாக மாறியுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.