

நியூயார்க்: என்விடியா நிறுவனத்தின் சிஇஓ ஜென்சன் ஹுவாங், அமெரிக்க உளவுத் துறையால் சீன உளவாளியாக சந்தேகிக்கப்படும் சீனத் தொழிலதிபர் ஆலிஸ் ஹுவாங்குடன் தனக்கு ரகசிய தொடர்பு இருந்ததை அண்மையில் ஒப்புக் கொண்டார்.
இந்நிலையில், அவருக்கு என்விடியா துணைத் தலைவராக பதவி வகித்து வரும் கிம்பர்லி பாவல் உடனும் தொடர்பு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்த கட்டுரை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் என்விடியாவின் வருடாந்திர தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது. அப்போது அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நிர்வாகிகள் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது, திருமணமானவரான கிம்பர்லி பாவலும் ஜென்சென் ஹுவாங்கும் நெருக்கமாக இருந்ததாக ‘தி நியூயார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனைக் கவனித்த ஹுவாங்கின் தனிப்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள், அந்த நபரைத் தனியே அழைத்துச் சென்று, தாங்கள் பார்த்த சம்பவம் குறித்து வெளியில் எங்கும் கூறக்கூடாது என நிபந்தனை விதித்து ரகசியக் காப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் பெற்றதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவிக்க ஜென்சென் ஹுவாங், கிம்பர்லி பாவல் மற்றும் என்விடியா நிறுவனம் மறுத்துவிட்டன.
யார் இந்த கிம்பர்லி பாவல்?
48 வயதான கிம்பர்லி பாவல், 2008-ம் ஆண்டு முதல் என்விடியா நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 2017-ம் ஆண்டு முதல் நிறுவனத்தின் சுகாதாரத் துறை துணைத் தலைவராக பதவி வகித்து வரும் இவர், மருத்துவ இமேஜிங் மற்றும் மருந்து கண்டுபிடிப்புக்கான ஏஐ தொழில்நுட்பப் பிரிவுகளை நிர்வகித்து வருகிறார்.
இந்த சர்ச்சைக்கு மத்தியில் என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சென் ஹுவாங் பதவி விலகினார்.
இதையடுத்து, என்விடியாவின் நிர்வாக துணைத் தலைவரும் தலைமை நிதி அதிகாரியுமான கோலெட் கிரெஸ், இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமை நிதி அதிகாரி பொறுப்பைத் தொடர்ந்து வகிப்பதோடு, நிறுவனத்தையும் வழி நடத்துவார் என்று என்விடியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.