

வட கொரிய மக்களுடன் அதிபர் கிம் ஜோங் உன்.
வட கொரியாவை இந்த பூவுலகின் மர்ம தேசம் என்று சொல்லலாம். அங்கு என்ன நடக்கிறது, எப்படி நடக்கிறது, ஏன் நடக்கிறது என்று எல்லாமே வெளியுலகுக்கு ரகசியம்தான். உலகமே கோவிட் பெருந்தொற்றில் சிக்கி மரணக் கணக்குகளை சொல்லிக் கொண்டிருந்தபோதும் கூட, உயிரிழப்புகள் பற்றி அங்கிருந்து ஒற்றைச் செய்திகூட பதிவாகவில்லை. ராணுவ கட்டுக்கோப்பு என்பதன் உண்மையான அடையாளமே வட கொரியாதான் எனலாம். அந்த அளவுக்கு மக்கள் ‘உம்’ என்றாலும், ‘இம்’ என்றாலும் ‘கிம்’மின் ராணுவம் வாசலில் வந்து நிற்குமாம்!
அப்படிப்பட்ட வட கொரியாவில் ஞாயிற்றுக்கிழமை காதும் காதும் வைத்த மாதிரி ஆளுங்கட்சியின் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடந்துள்ளது. அந்தத் தேர்தலில் தற்போதைய தலைவர் கிம் ஜோங் உன்-க்கு ஆதரவாக 99.93% வாக்குகள் பதிவாகியுள்ளது. மொத்தமுள்ள 687 இடங்களிலும் ஆளும் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. இதன் நீட்சியாக வட கொரியாவின் 15-வது மக்கள் உச்ச அவை மார்ச் 22-ம் தேதி செயல்படத் தொடங்கும் என்று கொரிய மத்திய செய்தி முகமை (KCNA) தெரிவித்துள்ளது.
வட கொரிய செய்திகளை அதிகாரபூர்வமாக வெளியிடக் கூடிய ஒரே செய்தி நிறுவனமும் இதுதான். இந்தச் செய்தி நிறுவனம் வெளியிடும் செய்திகளும், அதன் மீதான பகுப்பாய்வுகளும் மட்டும்தான் வட கொரியா பற்றி நாம் தெரிந்துகொள்ளக் கூடிய ஒற்றை சோர்ஸ்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) வட கொரியாவின் ஆளும் கொரிய தொழிலாளர் கட்சி (Workers’ Party of Korea) சார்பில் பிரம்மாண்ட கூட்டம் நடந்தது. நாட்டின் ராஜதந்திர கொள்கைகள் முதல் போர் திட்டமிடல் வரை எல்லாமே இக்ட்சியின் மேற்பார்வையில்தான் நடக்கிறது. அந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து தேர்தலும் நடைபெற்றது. ஆளும் கட்சியின் தலைவராக கிம் ஜோங் உன்னை தேர்வு செய்யும் இந்தத் தேர்தலில் கிம் வேட்பாளரே இல்லை என்பது கூடுதல் ருசிகரத் தகவல்.
இது தான் ‘டேக் அவே’
தேர்தலில் 0.07% தவிர, முழு ஆதரவும் கிம் பக்கமே என்கிறபோது, இந்தத் தேர்தல் ஏன் செய்தியாகிறது என்றால், உட்கட்சி ரீதியாக சில முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மக்கள் உச்ச அவைக்கு தேர்வாகியுள்ள பிரதிநிதிகளில் 70%-க்கும் மேற்பட்டோர் புதிய முகங்கள். இது அரசியல் அமைப்புக்குள் ஒரு பெரிய அளவிலான மறுசீரமைப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது.
இந்தப் புதிய பிரதிநிதிகளுடன் மார்ச் 22 நடைபெறும் கூட்டத்தில் வட கொரியாவின் அரசியலமைப்பில் முக்கிய திருத்தங்களைக் கொண்டுவருவது பற்றியும், முக்கிய தலைமைப் பொறுப்புகள் பற்றியும் குறிப்பிடத்தக்க முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இதைக் கொண்டு கிம் பழைய அதிகார மையங்களை ஒழித்துவிட்டு தனக்கு விசுவாசமான நபர்களைக் கொண்டுவரக் கூடும் என்றும் கூறப்படுகிறது. அதுவும் குறிப்பாக, அந்த விசுவாசிகள் பட்டியலில் கிம்மின் நெருங்கிய கூட்டாளியான ஜோ யோங் வொன் பெயர் அடிபடுகிறது. அவர் நாடாளுமன்றத்தில் முக்கியப் பொறுப்பைப் பெறக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல், மூத்த தலைவரான சோ ரியாங் ஹே முக்கியப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். புதிதாக உச்ச அவைக்கு தேர்வானவர்களில் கிம்மின் சகோதரி கிம் யோ ஜோங் மற்றும் வெளியுறவு அமைச்சர் சோ சோன் ஹுயி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இது கிம் ஜோங் உன்னின் உள்வட்டாரத்தை பலப்படுத்தும் நகர்வாகப் பார்க்கப்படுகிறது. இதுதான் இந்தத் தேர்தல் செய்தி முக்கியத்துவம் பெறக் காரணம்.
ஒற்றை சர்வாதிகார ஆட்சி
வட கொரியாவில் ஆளும் கொரிய தொழிலாளர்கள் கட்சி தான் அங்கு சர்வாதிகாரம் பொருந்திய கட்சி. சில குட்டிக் குட்டி அரசியல் கட்சிகள் பெயரளவில் இயங்குகின்றன. அவர்களும் ஆளும் கூட்டணியின் கட்டுப்பாட்டில் தான் இயங்குவார்களே தவிர, அவர்களுக்கென்று எந்த சுயமான அரசியல் அதிகாரமும் இல்லை. அதனால் தேர்தல் களத்தில் அவர்கள் போட்டியாளர்கள் இல்லை.
தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் யார் போட்டி என்பதை கட்சித் தலைமை முடிவு செய்கிறது. ஒரு தொகுதிக்கு ஒரு வேட்பாளர் தான் வாக்காளர்கள் முன்னால் இருக்கும் சாய்ஸ். அதனால் வட கொரிய தேர்தலில் வாக்காளர்கள் எஜமானர்கள் அல்ல. வாக்கை செலுத்த ஒரு கருவிதான் அவர்கள். தேர்தல் மட்டுமல்ல ஊடகமும், தேர்தல் தொடர்பான மக்கள் கருத்துகளும் அரசுக் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது.
தேர்தல் நடைமுறையும் கூட ஜனநாயக நாடுகளைப் போல் ரகசிய வாக்கெடுப்பில் நடப்பதில்லை. ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும், ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவை அங்கீகரிக்கும் வகையிலும் மட்டுமே தேர்தல் நடைபெறுகிறது.
எங்கே போயின அந்த 0.07% வாக்குகள்?
வட கொரிய தேர்தல் நடைமுறையையும், அங்கே எதிர்க்கட்சியே இல்லை என்பதையும் தெரிந்து கொண்டதால், அங்கு 99.93% வாக்குகள் மட்டுமே பதிவானது எப்படி? 0.07% எங்கே போயின என்ற கேள்வி இப்போது உங்களுக்கு எழலாம்.
வாக்காளர்கள் தங்கள் முன்னால் இருக்கும் ஒற்றை வேட்பாளருக்கு வாக்களிக்காமல் இருப்பதற்கான வாய்ப்பு தொழில்நுட்ப ரீதியாக இருந்தாலும் கூட, அதில் ரகசியத் தன்மை ஏதும் இல்லாததால் அப்படி வாக்களித்தால் அரசு துரோக நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.
இதனால், இந்த 0.07% நெகடிவ் வாக்கு என்பது வெறும் அடையாளம். போலிக் கணக்கு என்று எளிமையாகச் சொல்லலாம். வட கொரியாவில் ஜனநாயகம் இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக செய்யப்படும் சால்ஜாப்பு இது.
வட கொரிய தேர்தல் என்பது கிம் ஜோங் உன்னின் கட்டுப்பாட்டில் நிகழும் தலைமையை கட்டளைப்படி ஒருமனதாக, முழுமையாக ஆதரிக்கும் நடைமுறையே தவிர, அரசியல் போட்டிகளின் ஊடே நடக்கும் ஜனநாயகத் தேர்தல் அல்ல. இதனால் தன் உலகம் முழுவதுமான ஊடகங்கள் வட கொரிய தேர்தலை ‘ரப்பர் ஸ்டாம்ப் தேர்தல்’ என்றழைக்கின்றன.