

துபாய்: மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் ஆகியோர் துபாய் மாலில் பொதுமக்களுடன் இயல்பாக உலா வந்த காட்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் பதற்றமான சூழலிலும் தன்னம்பிக்கையின் வெளிப்பாடாக இந்த காட்சி அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஈரான் ஏவிய ஏராளமான ட்ரோன்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தியதாக அமீரக அரசு உறுதிப்படுத்திய சில மணி நேரங்களிலேயே இந்த நிகழ்வு நடந்துள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள போதிலும், துபாய் மாலில் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் வழக்கம் போலக் கூடியிருந்தனர். அப்போது அங்கிருந்த மக்களுடன் அதிபரும் இளவரசரும் கலந்துரையாடினர்.
இணையதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், அதிபர் ஷேக் முகமது ஒரு சிறுமியை அருகில் அழைத்து, குனிந்து அவளது கையில் முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான காட்சி இடம்பெற்றுள்ளது.