

ஜெருசலேம்: காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தின் பிடியை மேலும் விரிவுபடுத்தப்போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். காசாவின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 70 சதவீத பகுதியை ராணுவத்தின் நேரடிப் பாதுகாப்புக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதே தற்போதைய இலக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குக்கரையில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றிய பிரதமர் நெதன்யாகு, "பாலஸ்தீன பகுதியில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான எங்களது ராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. முன்னதாக காசாவின் 50 சதவீத பகுதியில் இருந்த எங்களது ராணுவக் கட்டுப்பாடு, தற்போது 60 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அடுத்தகட்டமாக இதனைப் படிப்படியாக நகர்த்தி, முதற்கட்டமாக 70 சதவீதக் கட்டுப்பாட்டை எட்டுமாறு நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.
நெதன்யாகு பேசிக்கொண்டிருந்த போதே, அரங்கிலிருந்தவர்கள் காசா பகுதி முழுவதையும் இஸ்ரேல் தன்வசப்படுத்த வேண்டும் என முழக்கமிட்டனர். 2025 தற்காலிக அமைதி ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல் படைகள் காசாவின் 53% நிலப்பரப்பை உள்ளடக்கிய மஞ்சள் கோடு எல்லை வரை பின்வாங்கியிருக்க வேண்டும். ஆனால், இஸ்ரேல் இந்த எல்லையைத் தாண்டி காசாவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும், போர்நிறுத்த காலத்திலும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 900 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் காசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காசா மட்டுமின்றி, லெபனானின் தெற்குப் பகுதியிலும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளைக் கடுமையாக்கியுள்ளது. தெற்கு லெபனானின் பரந்த பகுதியை யுத்த பகுதியாக அறிவித்துள்ள இஸ்ரேல் ராணுவம், அங்கிருக்கும் மக்களை ஜஹ்ரானி ஆற்றுக்கு வடக்கே உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேல் எல்லைக்கு வடக்கே 40 கிலோமீட்டர் தொலைவு வரையுள்ள இப்பகுதியில் ஹிஸ்புல்லா இலக்குகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாத போர்நிறுத்த உடன்பாட்டையும் மீறி, ஒரே நாளில் லெபனானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இஸ்ரேல் 120-க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
தங்களின் புனித நாளான பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்களின் மத்தியில், லெபனான் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சீதோன் கடற்கரை நகரத்தை நோக்கித் தஞ்சமடைந்து வருவதாக லெபனான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.