

நடிகர் சிவக்குமார்
கோவை: தவெக தலைவர் விஜய்யை நினைத்து சந்தோஷ பட வேண்டும். அவர் ஏதாவது வித்தியாசமாக செய்வார் என்று தான் அவருக்கு மக்கள் வாக்களித்து உள்ளார்கள் என கோவையில் திரைப்பட நடிகர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இன்று (மே 28) தனியார் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர்கள் சிவக்குமார், சத்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நடிகர் சிவக்குமார் கூறியதாவது:
உடல் உறுப்பு தானம் செய்வதற்கு முன்பு நம்முடைய உடலை நாம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். உடலை நல்லபடியாக வைத்துக் கொண்டால் தானம் என்ற நடைமுறைக்கு செல்ல தேவையில்லை. தினமும் யோகா செய்கிறேன். யாரும் பெரிய ஆள் என்று நினைக்காமல் அனைவரிடமும் நன்கு பழகினால் மன அழுத்தம் என்பது வராது. செல்போன்கள் எல்லாம் ஓரம் தள்ளி வைத்துவிட்டு ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும்.
யாரும் தனியாக வாழாதீர்கள். நெருக்கமான நண்பர்களை உடன் வைத்துக் கொள்ளுங்கள். நானும் சத்யராஜூம் அனைத்தையும் பகிர்ந்து கொள்வோம். எனது நண்பர்களிடம் தினமும் ஒரு மணி நேரமாவது நான் பேசுவேன். மன அழுத்தம் வருவதற்கு முக்கிய காரணம் தனிமை தான். எனவே, அனைவரும் நண்பர்களுடன் இருங்கள். உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் மருத்துவர்களே தேவை இல்லை.
தவெக தலைவர் விஜய்யை நினைத்து சந்தோஷ பட வேண்டும். அவர் ஏதாவது வித்தியாசமாக செய்வார் என்று தான் அவருக்கு மக்கள் வாக்களித்து உள்ளார்கள். மாற்றம் என்பது உலகத்தில் தவிர்க்க முடியாத விஷயம்.
பெருந்தலைவர் காமராஜரை போல ஒரு தலைவரை எங்காவது பார்க்க முடியுமா? அவரையே தோற்கடித்தார்கள். காமராஜர் வேண்டாம்; மாற்றம் வேண்டும் என்று அப்போது மக்கள் நினைத்தார்கள். திமுகவும் குறிப்பிட்ட ஆண்டுகள் ஆண்டன. தற்போது அதுவும் வேண்டாம் என்று மக்கள் விஜய்க்கு வாக்களித்துள்ளார்கள். யார் வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்கிறார்கள். மக்கள் தான் எப்போதும் நீதிபதிகள். மக்கள் என்ன முடிவு செய்தாலும் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அடுத்த தலைமுறை எங்களுக்கு ஒரு சரியான தலைவர் வேண்டும் என்று முடிவெடுக்கும் போது, அதனை தவறு என்று கூறுவதற்கு நீங்கள் யார். மக்களுக்கு அறியாமை உள்ளவரை அரசியல்வாதிகளும் சினிமா துறையினரும் பிழைத்துக் கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து நடிகர் சத்யராஜ் கூறும்போது, ‘‘நான் காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்வேன். நான் உடற்பயிற்சியையும் வாழ்க்கையும் தனித்தனியாக பிரித்துக் கொள்வது இல்லை. இரண்டும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. முடிந்தவரை மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.