“இந்தியா வழங்கிய மிகப் பெரிய உதவிக்கு நன்றி” - நேபாள அதிபர்

“இந்தியா வழங்கிய மிகப் பெரிய உதவிக்கு நன்றி” - நேபாள அதிபர்
Updated on
1 min read

காத்மாண்டு: கடும் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு இந்தியா அளித்த உதவிக்காக அந்நாட்டு அதிபர் ராமச்சந்திர பவுடெல் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பேரிடரைத் தொடர்ந்து, நீங்கள் காட்டிய கனிவான அக்கறைக்கும், உங்கள் அரசு வழங்கிய தாராளமான உதவிக்கும், ஒற்றுமை உணர்வுக்கும், நேபாள அரசு மற்றும் மக்கள் சார்பாக எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பேரிடரில் இந்தியர்கள் உயிரிழந்த துயரச் சம்பவத்துக்காக, இந்திய அரசுக்கும் மக்களுக்கும் எங்கள் மனமார்ந்த இரங்கலையும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 26 அன்று நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தை அடுத்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இன்று ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கினால் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவைக்காக அதிபர் ராமச்சந்திர பவுடெல் மற்றும் நேபாள மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இக்கட்டான இந்த நேரத்தில் நேபாளத்துடன் நாங்கள் துணை நிற்கிறோம். இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நேபாள அரசின் நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்க இந்தியா தயாராக உள்ளது,” என்று தெரிவித்திருந்தார்.

ஆகஸ்ட் 26 அன்று பிரதமர் நரேந்திர மோடி, நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷாவிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது, நேபாள வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குத் தமது இரங்கலைத் தெரிவித்தார்.

பின்னர் இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவிடம் தொலைபேசியில் பேசி, நேபாளத்தில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்தேன். இந்த இக்கட்டான நேரத்தில், இந்திய மக்கள் நேபாளத்தில் உள்ள தங்கள் சகோதர சகோதரிகளுக்குத் துணை நிற்கிறார்கள். நேபாளத்திற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது. இந்தியக் குழுக்கள் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன” என தெரிவித்திருந்தார்.

இந்தியா இதுவரை மூன்று விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்களை நேபாளத்துக்கு அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

“இந்தியா வழங்கிய மிகப் பெரிய உதவிக்கு நன்றி” - நேபாள அதிபர்
“பாஜக, ஆர்எஸ்எஸ் தீண்டாமையை கடைப்பிடிக்கின்றன” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in