

காத்மாண்டு: நேபாளத்தில் மீட்கப்பட்ட அடையாளம் காண முடியாத உடல்களை அடக்கம் செய்வதற்கு முன்பு டிஎன்ஏ மாதிரி சேகரிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன சுமார் 3,000 பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பிரதமர் பாலேந்திர ஷா மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: மீட்புப் பணியின்போது ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
இதில் குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்ட உடல்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
அதேநேரம் பல உடல்கள் அடையாளம் காண முடியாத வகையில் சிதைந்துள்ளன. அந்த உடல்களை நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க முடியாது. எனவே, சட்டப்பூர்வ நடைமுறைகளுக்குப் பிறகு அவை அடக்கம் செய்யப்படவுள்ளன.
உரிமை கோரப்படாத உடல்களை அடக்கம் செய்வதற்கு முன்பு அரசு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும். குறிப்பாக, அடையாளம் தெரியாத உடல்களின் டிஎன்ஏ மாதிரிகள் மற்றும் பிற தகவல்கள் அடக்கம் செய்வதற்கு முன்பு சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும். இது காணாமல் போனவர்களின் உறவினர்கள், தங்கள் அன்புக்குரியவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.