

உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்
திருவாரூர்: தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கம், பாயும் புலியாக மாறி வருகிறது என்று உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் இயக்கம், நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறி வருகிறது. காங்கிரஸ் கட்சியைக் கடந்த காலங்களைப் போல நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. நிமிர்ந்த நன் நடையோடு, அரசியல் களத்திலும் போராட்டக் களத்திலும் நிற்க காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. நாங்கள் திமுக கூட்டணியில் இல்லை.
எங்களை திமுகவினர் விமர்சனம் செய்தால், நாங்களும் விமர்சனம் செய்வோம். ஆனால், விமர்சனம் என்பது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். துணைவேந்தர் நியமனம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், வெளிப்படையாக எதையும் சொல்ல முடியாது. அதேநேரத்தில், பல்கலைக்கழகங்களில் காலியாகவுள்ள துணைவேந்தர் பதவிகளை நிரப்புவதில் முதல்வர் விஜய் முனைப்பாக உள்ளார். அதற்குரிய நடவடிக்கைகளை சட்டப்படி அவர் மேற்கொள்வார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.