

காத்மாண்டு: ரூ.200 மற்றும் ரூ.500 இந்திய கரன்சி நோட்டுகளை நேபாளத்தில் பயன்படுத்துவது தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது நேபாள ராஷ்டிர வங்கி.
இந்த புதிய அறிவிப்பின்படி 2016, நவம்பர் 9 மற்றும் அதற்கு பிறகு வெளியான ரூ.200 மற்றும் ரூ.500 இந்திய கரன்சி நோட்டுகளை அந்நாட்டில் பயன்படுத்தலாம். இந்திய மதிப்பில் அதிகபட்சம் ரூ.25,000 வரையில் நேபாள மற்றும் இந்திய மக்கள் அந்த நாட்டுக்கு கொண்டு செல்லவும், கொண்டு வரவும் முடியும். இந்த அறிவிப்பு கடந்த பிப்.11-ம் தேதி அன்று அந்நாட்டின் அரசிதழில் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் அது குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டு, விளக்கம் கொடுத்துள்ளது நேபாள ராஷ்டிர வங்கி.
இந்திய கரன்சி நோட்டுகளை நேபாள மக்கள் இந்தியாவில் இருந்து மட்டுமே கொண்டு வர அனுமதிக்கப்படுவார்கள். வேறு எந்த நாட்டில் இருந்தும் இந்திய கரன்சி கொண்டுவர அனுமதி இல்லை. அதேபோல் இங்கிருந்து இந்தியாவுக்கு மட்டுமே மக்கள் இந்திய கரன்சிகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று நேபாள ராஷ்டிர வங்கியின் செய்தித் தொடர்பாளர் குரு பிரசாத் பவுடேல் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நேபாளத்துக்கு சுற்றுலா நிமித்தமாக வரும் இந்திய மக்கள் மற்றும் இந்தியாவுடன் வணிகம் சார்ந்து செயல்பட்டு வரும் நேபாள மக்கள் பலன் அடைவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல மற்ற நாடுகளில் இருந்து 5,000 டாலர்கள் வரையிலான கரன்சியை சுங்கத்துறையினரிடம் அறிவிக்காமல் கொண்டு வரலாம் என நேபாள ராஷ்டிர வங்கி தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் கடந்த 2016, நவம்பர் 8-ல் பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு முன்பு பயன்பாட்டில் இருந்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் கரன்சி நோட்டுகள் நேபாளத்திலும் செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.