புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு, நீட் வினாத்தாள் கசிவு முறைகேடு, இ20 ஊழல், வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள பின்னடைவு உள்ளிட்ட விவகாரங்களை எதிர்வரும் மழைக்காலக் கூட்டத் தொடரில் எழுப்ப உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 20-ம் தேதி தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 13 வரை இக்கூட்டத்தொடர் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு, வரும் 19ம் தேதி மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய முக்கிய விவகாரங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி இன்று கூட்டியது. காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், சசி தரூர், ஜெயராம் ரமேஷ், ப. சிதம்பரம், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “மழைக்காலக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ள மசோதாக்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் கிடைக்கவில்லை. ஜூலை 19ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அதில் அதிகாரப்பூர்வ தகவல்களைப் பெறுவோம்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் அரசுக்கு பெரும் தோல்வியையும், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற முடியாத நிலையையும் ஏற்படுத்திய தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்த உள்துறை அமைச்சர் முயன்று வருவதாக நாங்கள் கேள்விப்பட்டோம். தொகுதி மறுவரையறை மசோதாவை நாங்கள் தொடர்ந்து கடுமையாக எதிர்ப்போம். இதில், அனைத்து எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பேணிக்காக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்துக்காக ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கை குறித்து சில விவாதங்கள் நடைபெற்றன. வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான கல்வி நிறுவன மசோதாவையும் நாங்கள் எதிர்ப்போம். இந்த மசோதா இந்த கூட்டத்தொடரிலேயே அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. அதேபோல், FCRA மசோதாவும் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது. இதையும் நாங்கள் எதிர்ப்போம்.
மக்களவையில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் வழங்குவது குறித்து எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் ஏற்கெனவே தெரிவித்துள்ளோம். தற்போதுள்ள 543 நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு இடம் என்பது 181. இந்த இடங்களை இப்போதே பெண்களுக்கு ஒதுக்கலாம். அதை நாங்கள் ஆதரிக்கத் தயார். ஆனால், பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா என்ற பெயரில் தொகுதி மறுவரையறை மசோதவை கொண்டு வர இந்த அரசு முயல்கிறது. இது ஒரு ஆபத்தான மசோதா.
எதிர்க்கட்சிகளில் பிளவை ஏற்படுத்துவதன் மூலம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெறுவதற்கான முயற்சிகளில் உள்துறை அமைச்சர் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார் என்பது உண்மைதான். ஆனால், அவ்வாறு ஒரு பெரும்பான்மையை பெறுவது களங்கமான பெரும்பான்மையாகவே இருக்கும். எனினும், மக்களவையில் அவர்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை. நாங்கள் எதிர்க்கட்சிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். ராகுல் காந்தி தொடர்பில் இருக்கிறார்.
நாங்கள் எழுப்ப விரும்பும் வேறு பிரச்சினைகளும் இருக்கின்றன. அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மோசடி, எத்தனால் கலந்த எரிபொருள் (இ20) விவகாரத்தில் நடந்துள்ள ஊழல், வெளியுறவுக் கொள்கை தோல்வி, மேற்கு ஆசியாவில் மோசமடைந்து வரும் சூழல் ஆகிய விவகாரங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் எழுப்ப காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது” என தெரிவித்தார்.