

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு 37.5 டன் நிவாரண பொருட்களுடன் 2-வது விமானத்தை இந்தியா நேற்று அனுப்பியது. படம்: பிடிஐ
காத்மாண்டு: நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. மாயமான 1,500 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நிவாரணப் பொருட்களுடன் கூடிய 2-வது விமானத்தை நேபாளத்துக்கு இந்தியா அனுப்பியது.
மலைப்பிரதேசமான நேபாள நாட்டின் வடக்கே திபெத் எல்லை உள்ளது. அதன் அருகே உள்ள ரசுவா மாவட்டத்தில் போடே கோசி என்ற நதி ஓடுகிறது. இந்த நதியில் நேற்று முன்தினம் காலை திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பல அடி உயரத்துக்குக் கீழ் நோக்கி பாய்ந்த இந்த பெருவெள்ளம் ரசுவா, தாதிங் மற்றும் நுவாகோட் ஆகிய 3 மாவட்டங்களைப் புரட்டிப் போட்டது. வானுயர்ந்த கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள், நீர்மின் நிலையங்கள் என அனைத்தையும் வெள்ளம் சுருட்டிச் சென்றது.
இடிபாடுகளுடன், சேறும் சகதியுமாய் பாய்ந்தோடிய வெள்ளத்தில் ஏராளமான மக்கள் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 800 வெளிநாட்டினர் உட்பட 1,500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளள்ளதாக நேபாள அரசு நேற்று தெரிவித்தது.
இதுகுறித்து நேபாள காவல் துறை வெளியிட்ட அறிக்கையில், “வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் முழு வீச்சில் மீட்புப் பணிகள் நடைபெறுகின்றன. 5,000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸார் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 359 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டினர் உட்பட 1,500 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. இந்தத் தருணத்தில், எங்கள் முன்னுரிமை என்பது உயிர்களைக் காப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிப்பது, மீட்புமற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காத்மாண்டுவில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் சிஷிர் கனால் கூறியதாவது: இந்த பேரிடரால் ஏற்பட்ட முழு சேதத்தை அளவிட அதிகாரிகள் முயன்று வருகின்றனர். 1,500 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 300 பேர் இந்தியர்கள். அவர்களில் பெரும்பாலானோர் மானசரோவர் யாத்திரிகர்கள். அவர்களைத் தொடர்பு கொள்ள அரசு முயன்று வருகிறது.
நேபாள குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் நாங்கள் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளோமோ அதே அளவு வெளிநாட்டினரின் பாதுகாப்பு மற்றும் நலனிலும் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். இந்திய அரசு ஏற்கெனவே நிவாரண உதவிகளை அனுப்பியுள்ளது. நாங்கள் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நெருக்கடியான நேரத்தில் நேபாளத்துக்குத் துணை நிற்குமாறும், நாடு தன்னைத் தானே மீட்டெழுப்ப தொடர்ந்து இங்கு வருகை தருமாறும் நாங்கள் உலக நாடுகளிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். உடனடி நிவாரண நடவடிக்கைகள் மட்டுமல்லாது, நேபாளத்துடன் உலகம் தொடர்ந்து இணைந்திருப்பதும் நாங்கள் மீண்டு வர மிக முக்கியம்.
கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்துக்குப் பிறகும் நாங்கள் வலிமையுடன் மீண்டு வந்தோம். நேபாளம் தன்னைத் தானே சீரமைத்துக்கொள்ளும். இவ்வாறு வெளியுறவு அமைச்சர் சிஷிர் தெரிவித்தார்.
நேபாள பிரதமர் பாலேந்திரஷா வெள்ளம் பாதித்த நுவாகோட் மாவட்டத்துக்குத் தரை வழிப் பயணமாகச் சென்று சேதங்களை ஆய்வு செய்தார். அப்போது அவர் மீட்புப் பணிகள் குறித்து உள்ளூர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரிடம் நிலவரங்களைக் கேட்டறிந்தார். தொடர்ந்து, மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும், மக்களுக்குத் தேவையான நிவாரணத்தை விரைவாக வழங்கவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இந்தியா உதவி நேபாள நாட்டுக்கு அனைத்து வழிகளிலும் உதவ தயாராக இருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தெரிவித்தார். அதன்படி தற்காலிக கூடாரங்கள், போர்வைகள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவை அடங்கிய 10 டன் நிவாரணப் பொருட்கள் இந்திய விமானப் படை விமானம் மூலம் நேபாளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக நிவாரணப் பொருட்களுடன் கூடிய 2-வது விமானம் நேற்று நேபாளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் மற்றும் உணவுப் பொட்டலங்கள் உட்பட 37.5 டன் நிவாரண பொருட்கள் அந்த விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
மீண்டும் வெள்ள அபாயம்: சீன நீர்வளத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘சீனா - நேபாள எல்லையில் சோச்சென் கோலா, புரேபு சாங்போ நதிகள் சங்கமிக்கும் இடத்தில் மிகப் பெரிய ஏரி உருவாகி உள்ளது. இந்த ஏரி தற்போது நிரம்பி வழிகிறது.
அடுத்த சில நாட்களில் ஏரி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் நேபாளத்தின் போடே கோசி, திரிசூலியில் மீண்டும் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும்” என்று எச்சரித்துள்ளது. இதன் காரணமாக போடே கோசி, திரிசூலி நதிகளின் கரையோரம் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணியில் நேபாள அரசு ஈடுபட்டுள்ளது.