திரிசூலி ஆற்றில் அடர்த்தியாக மண் கலந்து ஓடும் நீர்
காத்மாண்டு: நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 547 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் காணாமல் போன நிலையில், அவர்களை தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது
இது தொடர்பாக நேபாள காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வெள்ளிக்கிழமை மாலை 3 மணி நிலவரப்படி 547 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நுவாகோட், ரசுவா, தாடிங், சித்வான், கோர்க்கா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. வெள்ளப் பெருக்கில் சிக்கி 1,473 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிகிச்சை முடிந்து 94 பேர் வீடு திரும்பியுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் 4,473 காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு செயலருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு:
நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கியுள்ள தமிழர்களை பத்திரமாக மீட்டு தமிழகம் அழைத்து வரும் நோக்கில் டெல்லியில் முகாமிட்டுள்ள ஆதவ் அர்ஜுனா தலைமையிலான 4 பேர் கொண்ட தமிழக அமைச்சர்கள் குழு, வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை இன்று சந்தித்தது.
அப்போது, நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விக்ரம் மிஸ்ரி அவர்களிடம் விவரித்தார்.
இந்தியா திரும்பிய 21 தமிழர்கள்:
நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கிய நிலையில், அந்நாட்டு ராணுவத்தால் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் பத்திரமாக இன்று டெல்லி வந்தடைந்தனர். அவர்களை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார்.
வெள்ளப் பெருக்கு அதிகரித்துக் கொண்டிருந்த நிலையில் அப்பகுதியில் இருந்த தாங்கள் உடனடியாக அருகில் இருந்த சிறிய மலை ஒன்றின் மீது ஏறியதாலேயே தப்பியதாக அவர்கள் அமைச்சர் ஜெய்சங்கரிடம் விவரித்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் கரை ஒதுங்கிய 7 சடலங்கள்:
நேபாள வெள்ளப் பெருக்கினால், உத்தரப் பிரதேசத்தின் நாராயணி நதியில் ஏழு சடலங்கள் கரை ஒதுங்கின. இந்தச் சடலங்கள் யாருடையவை என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
மீட்கப்பட்ட சடலங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் இந்தியர்களா, நேபாளிகளா எனக் கண்டறிய முடியாத நிலையில், அவை தொடர்பான புகைப்படங்களை நேபாள அரசுக்கும், இந்தியாவின் மத்திய அரசுக்கும் அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.
320 இந்தியர்களை காணவில்லை:
நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி 320 இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உயிரிழந்த இந்தியர்கள் குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
தற்போதைய நிலையில் 320 பேரை காணவில்லை. அதேநேரத்தில் இந்த எண்ணிக்கை என்பது கூடுதலாகவும் குறைவாகவும் இருக்கலாம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவர்கள் இல்லாது இந்திய குடியுரிமையோடு வேறு நாட்டின் குடியுரிமையைம் பெற்றுள்ள சுமார் 100 பேரையும் காணவில்லை.
சீனா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 400 இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர். அவர்கள் தங்கள் குடும்பத்தினரோடு தொடர்பில் இருப்பதாக எனக்கு சொல்லப்பட்டது. சீன பகுதியில் சிக்கியவர்களில் 96 பேர் தரை மார்க்கமாக நேபாளம் வந்து சேர்ந்துள்ளனர்.” என தெரிவித்தார்.
மீண்டும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு?
புதன்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட இடத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என நேபாளத்தின் தேசிய பேரிடர் அபாய குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. போட்டேகோஷி ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும் அது கூறியுள்ளது.
இந்த அச்சம் காரணமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது.
பேரிடர் நிவாரண நிதி:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நேபாள அரசு பேரிடர் நிவாரண நிதியை திரட்டி வருகிறது. பிரதமர் பலேந்திர ஷா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் தங்கள் ஒரு மாத ஊதியத்தை பிரதமரின் பேரிடர் நிவாரண நிதியில் செலுத்த இன்று முடிவு செய்தனர்.
அந்நாட்டின் தொழிலதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோரும் நிவாரண நிதியை அளித்து வருகின்றனர். இதனிடையே, மீட்பு மற்றும் தேடுதல் பணியில் பிற நாடுகளின் உதவி தேவையில்லை என்று நேபாள வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பணியில் தங்கள் நாட்டின் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது.
வெள்ளப்பெருக்குக்கு சீனா கூறும் காரணம்:
நேபாளத்தில் உள்ள உயரமான பனிப்பாறை சரிந்து விழுந்ததே திடீர் வெள்ளப் பெருக்குக் காரணம் என்பது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. சீன பகுதியில் வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 260 வெளிநாட்டினர் உட்பட 550-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.