நேபாளத்தில் இருந்து டெல்லி வந்தடைந்த 21 தமிழர்கள் - பாதுகாப்பாக திரும்பியது குறித்து விவரிப்பு

நேரில் வரவேற்ற வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
நேபாளத்தில் இருந்து டெல்லி வந்தடைந்த 21 தமிழர்கள் - பாதுகாப்பாக திரும்பியது குறித்து விவரிப்பு
Updated on
2 min read

புதுடெல்லி: நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கிய நிலையில், அந்நாட்டு ராணுவத்தால் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் பத்திரமாக இன்று டெல்லி வந்தடைந்தனர். அவர்களை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேரும், தங்களுக்கு நேர்ந்த நெருக்கடி குறித்து அமைச்சர் ஜெய்சங்கரிடம் விவரித்தனர். வெள்ளப் பெருக்கு அதிகரித்துக் கொண்டிருந்த நிலையில் அப்பகுதியில் இருந்த தாங்கள் உடனடியாக அருகில் இருந்த சிறிய மலை ஒன்றின் மீது ஏறியதாலேயே தப்பியதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த சந்திப்பின்போது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உடன் இருந்தார். பின்னர் இது குறித்து ஜெய்சங்கர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிலிருந்து மீட்கப்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 யாத்ரீகர்கள் அடங்கிய குழுவை வரவேற்றேன். அவர்களின் அனுபவங்களை நேரில் கேட்டறிந்தபோது நெகிழ்ச்சியடைந்தேன். இந்த மீட்பு நடவடிக்கையை மேற்கொண்ட நேபாள ராணுவம் மற்றும் அந்நாட்டு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இந்தியா திரும்புவதை சுமுகமாக ஒருங்கிணைத்த நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் பணிகளைப் பாராட்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை மேற்கொண்டிருந்த இந்தியர்கள் குழுவை சற்று முன் சந்தித்தேன். வெள்ளத்தில் சிக்கியிருந்த அவர்கள் நேபாள ராணுவத்தால் மீட்கப்பட்டு, காத்மாண்டுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் தாயகம் திரும்ப எங்கள் தூதரகம் ஏற்பாடு செய்தது. அவர்கள் பாதுகாப்பாகத் திரும்பியதில் மிகுந்த மகிழ்ச்சி.

அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிய நான் அவர்களைச் சந்தித்தேன். அங்குள்ள அனைத்து இந்தியர்களையும் தொடர்பு கொள்ள நாங்கள் தொடர்ந்து முயன்று வருகிறோம். இன்னும் 315-க்கும் மேற்பட்ட இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று நாங்கள் கருதுகிறோம். இப்போது வந்துள்ள 21 பேர் கொண்ட குழு உட்பட, பல்வேறு இடங்களிலிருந்து சுமார் 85 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மிகவும் கடினமான அந்த இடத்திலிருந்து தங்களை வெளியேற்ற பெரும் முயற்சி எடுத்த நேபாள ராணுவத்திற்கு அவர்கள் மிகுந்த நன்றியைத் தெரிவித்தனர்.

தற்போது, ​​மக்களை மீட்பது மற்றும் நிவாரணப் பணிகளில் நேபாளத்துக்கு உதவுவதிலேயே எங்கள் கவனம் உள்ளது. இன்று காலை கூட நேபாள வெளியுறவு அமைச்சரிடம் நான் பேசினேன். நாங்கள் அவர்களுக்குப் பல்வேறு வகையான உதவிகளை வழங்க முன்வந்துள்ளோம். அவர்கள் அதை ஆய்வு செய்து வருகின்றனர். தங்கள் தேவைகளுக்கு எது பொருத்தமானது என்று அவர்கள் கருதுகிறார்களோ, அதை அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.

நீர்மின் திட்டப் பகுதியில் உள்ள சுரங்கப் பாதை ஒன்றில் மக்கள் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, சுரங்கப் பாதை நிபுணர்கள் அடங்கிய ஒரு குழுவை நாங்கள் அங்கு அனுப்புகிறோம். மேலும், அவர்களுக்குத் தேவைப்படும் 'பெய்லி' வகை பாலங்களையும் நாங்கள் அனுப்புகிறோம். இவை விரைவாகப் பொருத்தி அமைக்கக் கூடிய வகையிலான பாலங்கள் ஆகும்.

மருத்துவக் குழுக்களும் அங்கு செல்லக்கூடும். ஒருவேளை, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால், நாங்கள் அவர்களை அனுப்புவோம். அதற்கான வாய்ப்பை நாங்கள் நேபாளத்துக்கு வழங்கியுள்ளோம். நிவாரணப் பொருட்களுடன் இரண்டு விமானங்கள் ஏற்கனவே அங்கு சென்றுவிட்டன, மூன்றாவது விமானம் இன்று புறப்பட உள்ளது.

இந்தச் சூழலை எவ்வாறு கையாள்வது, நேபாளத்தில் நிவாரணப் பணிகளுக்கு எவ்வாறு உதவுவது, நமது மக்களையும் பிற நாட்டினரையும் எவ்வாறு மீட்பது, எவ்வாறு அழைத்து வருவது என்பதுதான் தற்போது எங்களின் முன்னுரிமையாக உள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த இந்தக் குழுவினர் மிகவும் அசாதாரணமான சூழலைக் கடந்து பாதுகாப்பாகத் திரும்பியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது மிகவும் நெகிழ்ச்சியான ஒரு அனுபவமாகும்.

நேபாள அதிகாரிகளும் அந்நாட்டுப் படைகளுமே மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. எனவே, தற்போது இந்தியா வந்தடைந்துள்ள 21 பேர் கொண்ட இந்தக் குழுவினரும் நேபாள ராணுவத்தினராலேயே மீட்கப்பட்டனர். எங்கள் தரப்பிலிருந்து நேபாள அரசுக்கு வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்து வருகிறோம்,” என்று தெரிவித்தார்.

நேபாளத்தில் இருந்து டெல்லி வந்தடைந்த 21 தமிழர்கள் - பாதுகாப்பாக திரும்பியது குறித்து விவரிப்பு
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க முயற்சி: வெளியுறவு செயலருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in