

நேபாளத்தில் நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி லலித்பூரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்த பொதுமக்கள். படம்: பிடிஐ
காத்மாண்டு: நேபாளத்தில் நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாயின. வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை உடனடியாகத் தொடங்கியது. தேர்தலில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
நேபாளத்தில் கடந்த ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்புக்கு வித்திட்ட ஜென் இசட் இளைஞர்களின் போராட்டத்துக்குப் பிறகு, அந்நாட்டின் முதல் பொதுத் தேர்தல் நேற்று நடைபெற்றது. நேபாள நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில் மொத்தம் 275 இடங்கள் உள்ளன. இதில் 165 இடங்கள் நேரடித் தேர்தல் மூலமும் மீதமுள்ள 110 இடங்களுக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையிலும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
நேரடி தேர்தலில் 3,406 வேட்பாளர்களும், விகிதாச்சார முறையில் 3,135 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். 1.89 கோடிக்கும் அதிகமான தகுதிபெற்ற வாக்காளர்களுக்காக நாடு முழுவதும் 10,967 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
தேர்தலை முன்னிட்டு கடந்த புதன்கிழமை முதல் 3 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த 2-ம் தேதி நள்ளிரவுடன் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில், நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
தேர்தலையொட்டி நேபாள ராணுவம், காவல்துறையின் சுமார் 3.41 லட்சம் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் மொத்தம் 60 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிலவரம் பின்னர் தெரிய வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாக்கு எண்ணும் மையங்கள்: வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை உடனடியாகத் தொடங்கியதாக நேபாள தேர்தல் ஆணையர் ஜானகி குமார் துலதர் தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் முழுமையாக தெரியவர 2 நாட்களாகும் என்று தெரியவந்துள்ளது.