அன்று ஏவுகணை தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பிய மொஜ்தபா காமேனி - என்ன நடந்தது?

அன்று ஏவுகணை தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பிய மொஜ்தபா காமேனி - என்ன நடந்தது?
Updated on
1 min read

தெஹ்ரான்: ஈரானின் உச்சத் தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி கொல்லப்படுவதற்கு சில விநாடிகள் முன்பு மொஜ்தபா காமேனியும் அவருடன்தான் இருந்தார் என்றும், தாக்குதலுக்கு சில நொடிகள் முன்புதான் அவர் அங்கிருந்து வெளியேறினார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்.28-ம் தேதி தாக்குதலைத் தொடங்கின. முதல் தாக்குதலே, உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனியையும், ராணுவத் தளபதி உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் குறிவைத்து நடத்தப்பட்டது. உச்சத் தலைவர் தங்கி இருந்த மாளிகையை நோக்கி இஸ்ரேல் அடுத்தடுத்து மூன்று ஏவுகணைகளைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், அயதுல்லா அலி காமேனி, ராணுவத் தளபதி, முக்கியத் தலைவர்கள், அயதுல்லா அலி காமேனியின் குடும்பத்தினர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், மார்ச் 12-ம் தேதி ஈரானின் மூத்த மதகுருமார்கள், இஸ்லாமிய புரட்சிகரப் பாதுகாப்புப் படைத் தளபதிகள் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில், அயதுல்லா அலி காமேனியின் அலுவலக நெறிமுறைப் பிரிவின் தலைவர் மசாஹர் ஹுசைனி பேசியதன் ஆடியோ தற்போது கசிந்துள்ளது.

அதில், மசாஹர் ஹுசைனி பேசியதை தி டெலிகிராப் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் மசாஹர் ஹுசைனி கூறி இருப்பதாவது: தாக்குதலுக்கு சற்று முன்பு வரை மொஜ்தபா காமேனி, தனது தந்தையுடன் அந்த மாளிகையில் இருந்தார். ஏவுகணைகள் தாக்கும் சில கணங்களுக்கு முன்பே அவர் வெளியேறினார்.

ஏதோ ஒரு வேலையாக மொஜ்தபா வெளியே சென்றுவிட்டு திரும்ப வேண்டும் என்பதே கடவுளின் விருப்பமாக இருந்துள்ளது. கட்டிடத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடந்தபோது அவர் வெளியே மேல் தளத்துக்குச் சென்று கொண்டிருந்தார். இந்த தாக்குதலில் குறைந்தது மூன்று ஏவுகணைகளாவது பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு ஏவுகணை மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி இருந்த வளாகத்தின் பகுதியை தாக்கியது. மற்றொரு ஏவுகணை மொஜ்தபா காமேனியின் குடியிருப்பைத் தாக்கியது. மூன்றாவது ஏவுகணை அவரது மைத்துனரான மிஸ்பா அல்-ஹுதா பாகேரி கானியின் வீட்டைத் தாக்கியது.

இந்த தாக்குதலில், ஈரான் ராணுவத் தளபதி முகமது ஷிராசியின் உடல் துண்டு துண்டாக சிதறிவிட்டது. அவரது உடலின் எந்தப் பகுதியையும் கண்டறியமுடியவில்லை. இறுதியில் சில கிலோ கிராம் சதைகள் மட்டுமே கண்டெடுத்து அதுவே அவரது உடல் என்று அடையாளம் கண்டனர். இந்த தாக்குதலில் மொஜ்தபா காமேனியின் காலில் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டது. எனினும், இந்த தாக்குதலில் அவரது மனைவி சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். இவ்வாறு மசாஹர் ஹுசைனி பேசியதாக தி டெலிகிராப் தெரிவித்துள்ளது.

அன்று ஏவுகணை தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பிய மொஜ்தபா காமேனி - என்ன நடந்தது?
“உக்ரைனின் உண்மைத் தோழர்” - ஆஸ்கர் விழாவை தவிர்த்த நடிகர் சீன் பென் குறித்து ஜெலன்ஸ்கி நெகிழ்ச்சி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in