

அம்மான்: ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்வரவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறைப் பயணமாக, ஜோர்டான் நாட்டுக்கு நேற்று முன்தினம் சென்றடைந்தார். ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவின் அழைப்பை ஏற்று இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, இந்தியா - ஜோர்டான் தொழில்முனைவோர் கூட்டத்தில் நேற்று பங்கேற்ற பிரதமர் மோடி, இந்தியாவில் முதலீடு செய்ய ஜோர்டானின் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவும் கலந்து கொண்டார்.
அம்மான் நகரில் நடைபெற்ற தொழில்முனைவோர் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக உருவாக போகிறது. எனவே, இந்த வளர்ச்சியில் ஜோர்டான் நிறுவனங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளும் உருவாகியுள்ளன.
மருத்துவ உபகரணங்கள்: இந்தியா, ஜோர்டான் இடையே நல்லுறவு ஏற்பட்டு 75 ஆண்டுகளாகின்றன. இந்தியா மற்றும் ஜோர்டான் இடையிலான உறவு வரலாற்று ரீதியிலான நம்பிக்கை மற்றும் எதிர்கால பொருளாதார வாய்ப்புகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவானது. ஜோர்டானில் உள்ள இந்திய நிறுவனங்களால் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்க முடியும்.
இதன்மூலம், ஜோர்டான் மக்கள் பயன்பெறுவார்கள். மேலும், மேற்கு ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு நம்பகமான மையமாக ஜோர்டான் உருவாக முடியும். எனவே, ஜோர்டானிலுள்ள நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு முன்வரவேண்டும். அவ்வாறு வரும் நிறுவனங்களுக்கு போதிய வசதிகளை இந்தியா செய்து தரும். இந்தியாவில் செய்யும் முதலீடுகளால் ஜோர்டான் நிறுவனங்களுக்கு அதிக அளவில் வருவாய் வர வாய்ப்புள்ளது.
இந்தியாவுடன் இணையும்போது ஜோர்டான் நிறுவனங்கள் இந்தியா வளர வாய்ப்பை உருவாக்குவதோடு, தங்களது வருவாயையும் அதிக அளவில் பெருக்கிக் கொள்ள முடியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
எத்தியோப்பியா பயணம்: ஜோர்டான் நாட்டில் 2 நாள் சுற்றுப்பயணம் நிறைவுற்றதைத் தொடர்ந்து, எத்தியோப்பியாவுக்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். அதன் பின்னர் ஓமன் நாட்டுக்குச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதைத் தொடர்ந்து அவர் இந்தியா திரும்புகிறார்.