மெக்சிகோ நாட்டின் லாஸ் மசாட்லெகோஸ் என்ற போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டு வந்தவர் பாஸ்டோ இசிட்ரோ மேசா புளோரஸ். அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்பிஐ தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள இவன், குவாசாவே பகுதியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டான்.
அவனைப் பிடிப்பதற்காக மெக்சிகோ ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையின்போது, ராணுவத்தினருக்கும், ஆயுதம் ஏந்திய கும்பலுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. குவாசாவே நகரின் வானில் வட்டமிட்ட ராணுவ ஹெலிகாப்டர்களில் இருந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி மேசா புளோரஸ் கைது செய்யப்பட்டான். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் எப்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஹெராயின், மெத்தம் பெட்டமைன், கோகைன், பெண்டானில் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைப் பெருமளவில் அமெரிக்காவுக்குக் கடத்துதல், விநியோகித்தல் மற்றும் இறக்குமதி செய்தல் ஆகிய குற்றங்களில் இவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.