

வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற முதல் பெண்மணிகள் மாநாட்டில், வங்காள மொழி உட்பட 11 மொழிகள் பேசும் மனித ரோபோ அறிமுகம் செய்யப்பட்டது. உலகளாவிய கூட்டணியை ஏற்படுத்த 45 நாடுகளின் முதல் பெண்மணிகள் பங்கேற்கும் மாநாடு அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்றது.
இதில் ஃபிகர் என்ற அமெரிக்க ரோபோட்டிக்ஸ் நிறுவனம் உருவாக்கிய மனித ரோபோ, வெள்ளை மாளிகையின் முதல் ரோபோ விருந்தாளியாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரோபோ, மாநாட்டுக்கு தலைமை தாங்கிய மெலனியா ட்ரம்ப்புடன் இணைந்து வந்தது.
‘ஃபிகர் 3’ என்று பெயரிடப்பட்ட இந்த மனித ரோபோ, கூட்டத்தில் பங்கேற்ற வெளிநாடுகளைச் சேர்ந்த முதல் பெண்மணிகளை ஆங்கிலம், ஸ்பேனிஷ், பிரெஞ்சு, போர்ச்சுகீஸ், அராபிக், ஜாப்பனீஸ், ஹீப்ரூ, ஸ்லோவேனி, உக்ரேனியன், ஜார்ஜியன் உட்பட 11 மொழிகளில் வரவேற்றது.
அது வங்காள மொழியில் ‘ஸ்வாகதம்’ என கூறியது. இந்த மனித ரோபோ வீட்டு வேலைகளை செய்வதற்காக உருவாக்கப்பட்ட இயந்திரம். இதில் கேமிராக்கள் மற்றும் உணர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் மனைவி மெலனியா பேசியதாவது: என்னுடன் இணைந்ததற்காக ‘ஃபிகர் 3’-க்கு நன்றி.
நீ தான் வெள்ளை மாளிகைக்கு வந்த அமெரிக்காவில் தயாரான முதல் மனித ரோபோ விருந்தாளி. கற்றலுக்கான செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, மனித ரோபோ ஆசிரியர்கள், அமெரிக்க பொருளாதாரத்தை ஊக்குவிப்பதில் தொழில்நுட்பம் மற்றும் கல்வியின் பங்கு ஆகியவைதான் அடுத்த தலைமுறையை உருவாக்கும் 3 முக்கிய தூண்கள். செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் மனித உருவம் கொண்டது.
அது மனித வடிவிலேயே அமையும். மிக விரைவில், செயற்கை நுண்ணறிவு நமது செல்போன்களிலிருந்து வெளியேறி, மக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளக்கூடிய மனித ரோபோக்களாக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.