

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் 13 பேரை கொலை செய்தவருக்கு மக்கள் முன்னிலையில் மைதானம் ஒன்றில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தண்டனையை சிறுவன் ஒருவர் நிறைவேற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் கிழக்கு பகுதியில் உள்ள கோஸ்ட் நகரில் இந்த தண்டனை செவ்வாய்க்கிழமை அன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 9 குழந்தைகள் உட்பட 13 பேரை கொலை செய்தவருக்கு ஆப்கானிஸ்தான் உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இதற்கு தலிபான் ஆட்சியாளர்களும் அனுமதி அளித்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த 13 வயது சிறுவன், கொலையாளியை துப்பாக்கியால் சுட்டு இந்த மரண தண்டனையை நிறைவேற்றி உள்ளார். இதை உள்ளூர் செய்தி நிறுவனங்கள் உறுதி செய்துள்ளனர். மொத்தம் 5 ரவுண்டுகள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அப்போது அங்கு குழுமியிருந்த மக்கள் முழக்கங்களை எழுப்பியதாக தகவல்.
இதற்கு சர்வதேச அளவில் செயல்படும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மனிதாபிமானமற்ற, கொடூரமான மற்றும் சர்வதேச சட்டத்துக்கு முரணானது என ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா சிறப்பு தொடர்பாளர் ரிச்சர்ட் பென்னட் தெரிவித்துள்ளார்.
இந்த மரண தண்டனை நிறைவேற்றத்தின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளன. கடந்த 2021-ல் தலிபான் ஆட்சி அமைத்த பிறகு பொதுமக்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்படும் 11-வது மரண தண்டனையாக இது அமைந்துள்ளது. இதற்கு முந்தைய ஆட்சியில் குற்றவாளியின் மீது மக்கள் கல்லெறிவதும், சவுக்கால் அடிப்பதும் வழக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.