

‘த்ரிஷ்யம் 3’ படத்தின் படப்பிடிப்பு ஒட்டுமொத்தமாக முடிவுற்றது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா, ஆஷா சரத் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘த்ரிஷ்யம் 3’. இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பைத் தொடங்கினார்கள். தற்போது இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுற்றதாக படக்குழு அறிவித்திருக்கிறது. மேலும், அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
‘த்ரிஷ்யம் 3’ படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, இதன் தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவியது. மேலும், இது தொடர்பாக சிக்கல்களும் ஏற்பட்டன. இறுதியாக ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் ஒட்டுமொத்த உரிமையினையும் பனோராமா ஸ்டூடியோஸ் நிறுவனம் பெரும் விலைக் கொடுத்து கைப்பற்றி இருக்கிறது.
முதலில் மலையாள படமே வெளியாகும் எனவும், அதற்கு முன்பு இதர மொழி ரீமேக் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. இதில் முதல் பாகம் மட்டுமே அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தின் ரீமேக் தமிழில் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. முதல் பாகத்தில் கமல், கவுதமி உள்ளிட்ட பலர் நடிக்க பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.