அச்சத்துக்கு அப்பால்... அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?

அன்று ஈராக்... இன்று வெனிசுலா..!
அச்சத்துக்கு அப்பால்... அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
Updated on
3 min read

ஒரு நாட்டின் அதிபர் அதன் அண்டை நாட்டால் சிறைப்பிடிக்கப்படுகிறார். தங்கள் நாட்டின் அதிபர் சிறைபிடிக்கப்பட்டதைத் தெரிந்து கொண்ட மக்கள் அதை கொண்டாட்ட மனநிலையோடு அணுகுகின்றனர். ஒரு சிலர் அச்சத்தோடு வேடிக்கைப் பார்க்கின்றனர், இன்னும் சிலர் புதிய நம்பிக்கையுடன் அதை வரவேற்கின்றனர்.

இந்தக் கலவையான மனநிலை வெனிசுலா நிலவரம் மட்டுமல்ல, அமெரிக்காவில் வாழும் வெனிசுலா நாட்டவர் மற்றும் ஸ்பெயின் போன்ற பிற தேசங்களில் வசிக்கும் வெனிசுலா மக்களிடமும் பிரதிபலிப்பதை ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வெளிச்சம்போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

இத்தனைக்கும் வெனிசுலா ஏதோ வறண்ட, பட்டினிப் பிணி பிடித்த தேசம் கூட அல்ல. உலகின் மொத்த எண்ணெய் வளத்​தில் 18% வெனிசுலா​வில் உள்​ளது. ஆனாலும் ஏன் அந்நாட்டு மக்கள் தங்கள் அதிபர் சிறைப்பிடிக்கப்பட்ட நிகழ்வைக் கொண்டாடினர் என்பது குறித்து அறிய முற்பட்டபோது வெனிசுலா பற்றி பல சுவாரஸ்யத் தகவல்களும், சிறைபிடிக்கப்பட்ட முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவருக்கு முந்தைய அதிபர் ஹியூகோ சாவேஸ் குறித்து பல விஷயங்களும் தெரியவந்தன.

<div class="paragraphs"><p>மதுரோ (இடது), ஹியூகோ சாவேஸ் (வலது) - 2010-ல் எடுக்கப்பட்ட படம்</p></div>

மதுரோ (இடது), ஹியூகோ சாவேஸ் (வலது) - 2010-ல் எடுக்கப்பட்ட படம்

சாவேஸ் முதல் மதுரோ வரை... - லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே வெனிசுலாவின் வரலாறு கவனிக்கத்தக்கது. வேளாண் பொருளாதாரம் கொண்ட ஒரு தேசம் நகரமயமாகி, வேகமாக வளர்ச்சி கண்ட விதமே அதற்குக் காரணம்.

1959-ல் லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே வெனிசுலா ஒரு ஸ்திரமான அரசைக் கொண்டதாக இருந்தது. அங்கு உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் வயல்கள் இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் வெனிசுலா அதன் மூலம் செழிப்படையத் தொடங்கியது.

ஆனால் 21-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெனிசுலா வேறொரு அரசியல் பாதையில் செல்லத் தொடங்கியது. அப்போது அதிபராக இருந்த ஹியூகோ சாவேஸின் ஆட்சி கவனம் பெறலானது.

1999-ல் வெனிசுலாவின் அதிபரான ஹியூகோ சாவேஸ், ‘பொலிவிரியன் புரட்சி’ ( Bolivirian Revolution) என்ற பெயரில் சோசலிஸக் கொள்கைகளை அறிமுகப்படுத்தினார். நாட்டின் பெயரைக் கூட வெனிசுலா பொலிவிரியன் குடியரசு என்று மாற்றினார்.

பொலிவர் என்பவர் சாவேஸின் கொள்கை குரு. அவருக்கு மாவோ, ஸ்டாலின், லெனின் மீதும் கூட ஈடுபாடு இருந்தது. சோசலிஸக் கொள்கைகளைப் புகுத்தி வெனிசுலா அரசியல் சாசனத்தை மாற்றியமைத்தார். அதுவரை அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு நாட்டில் கொட்டமடித்த ஆட்சியாளர்களை ஒடுக்குவேன் என்று சூளுரைத்தே ஆட்சிக்கு வந்திருந்ததால், மக்கள் பணிகளில் ஆர்வம் காட்டினார்.

எண்ணெய் வளம் இருந்தும் ஏன் பொருளாதாரத் தேக்கநிலை என்று சிந்தித்து, கச்சா எண்ணெய் விலையை அதிகரித்தார் சாவேஸ். பெட்ரோலியத்தை நாட்டுடைமையாக்கினார். இயற்கை வளமாக பெட்ரோலியத்தை வைத்து தனியார் நிறுவனங்கள் செல்வத்தில் மிதப்பது தடைபட்டது. அவரின் கட்டுப்பாடுகளால் அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்திருந்தது. சில பெருஞ் செல்வந்தர்களும் எரிசலில் இருந்தனர். சாவேஸுக்கு எதிராக அமெரிக்கா களமிறங்கியது.

ஆனாலும் எதைப் பற்றியும் சட்டை செய்யாமல், அவர் தொடர்ந்து ஏகாதிபத்தியத்துக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார். உள்நாட்டில் மட்டுமல்ல ஐ.நா. அவையிலும் கூட அமெரிக்காவை, அதன் அதிபரை சரமாரியாக சர்வசாதாரணமாக விமர்சித்து கர்ஜித்தார். ஆனாலும் அவருடைய ஆட்சியில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. அதற்கு அவரது கொள்கைகளே காரணம் என்று பல்வேறு விவாதங்களுக்கும் வழிவகுத்தது.

இந்நிலையில், 2013-ம் ஆண்டு சாவேஸ் உயிரிழந்தார். அதன்பின்னர் வெனிசுலாவில் ஸ்திரமான ஆட்சி அமையவில்லை.

2018-ம் ஆண்டு நிக்கோலஸ் மதுரோ அதிபரானார். எதிர்க்கட்சிகளை தேர்தலில் போட்டியிட விடாமலேயே அவர் அதிபரானார். 6 ஆண்டுகளுக்குப் பின்னர் 2024-ல் தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனாலும், மதுரோ அதனை அனுமதிக்கவில்லை. முழு சர்வாதிகாரியாக மாறியிருந்த மதுரோ மீண்டும் அதிபரானார். வெனிசுலாவில் போதைக் கும்பல்கள் ஆதிக்கம் மேலோங்கியது.

இப்படி சாவேஸுக்குப் பின்னர் தேர்தலே இல்லாமல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த நிக்கோலஸ் மதுரோ சிறைப்பிடிப்பைத்தான் வெனிசுலாவாசிகள் கொண்டாடியுள்ளனர்.

கொண்டாட்டமும் கேள்விகளும்! - ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் வாழும் வெனிசுலாவாசிகள் இந்த நகர்வைக் கொண்டாடித் தீர்த்தனர். இதற்காகத் தான் காத்திருந்தோம் என்பதுபோல் அவர்களின் கொண்டாட்டங்கள் அமைந்திருந்தன.

ஆனாலும் சிலர் பயத்தில் நிசப்தத்தை தழுவி நிற்கின்றனர். அடுத்து என்ன நடக்குமோ என்பதே அவர்களின் அச்சத்துக்கு காரணம் எனலாம். இப்போது வெனிசுலா மக்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையும், சந்தேகமும் ஒருபுறம், நிம்மதியும், நம்பிக்கையும் மறுபுறம் என்று நிலவுகிறது.

ஸ்பெயினில் களைகட்டிய மதுரோ கைது கொண்டாட்டம் பற்றி வெனிசுலாவிலிருந்து புலம்பெயர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், “இங்கே நிகழும் கொண்டாட்டங்களைக் காணும்போது எனக்குக் கவலையாக இருக்கின்றது. மதுரோவை சிறைப்பிடிக்கப்பட்டதில் நிம்மதிதான். ஆனால், அடுத்து என்ன நடக்கும். போர் மூண்டால் என்னவாகும்? எனக்கு அங்கே உள்ள எனது குடும்பத்தினரின் பாதுகாப்பே முக்கியம்” என்றார்.

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் வெனிசுலாவாசிகள் நடத்திய கொண்டாட்டப் பேரணியில் அமெரிக்கக் கொடிகளுடன் சிலர் இருந்தனர். இன்னும் சிலர் ட்ரம்ப்பை புகழ்ந்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் வந்தனர். ஒரு பெண் ட்ரம்ப்பை போலவே வேடமிட்டு வந்திருந்தார்.

இதையெல்லாம் கவனித்திருந்த அமெரிக்காவில் வசிக்கும் வெனிசுலாவைச் சேர்ந்த ஓர் இளைஞர், “மதுரோ கைது என்பது எனக்கு மகிழ்ச்சியே. ஆனால், எனது தேசத்தை அமெரிக்கா ‘ஸ்டாக்’ செய்து கொண்டிருக்கிறது என்பது கவலையளிக்கிறது” என்றார்.

மதுரோ கைதுக்கு கியூபா, கொலம்பியா, மெக்சிகோ நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எல்லாம் ஏதோ ஒப்புக்கு கருத்து சொல்லிச் சென்றுள்ளன. இதுபோன்ற மென்மையான கண்டிப்புகள் ட்ரம்ப்பை எந்த வகையிலும் அசைத்துப் பார்க்காது.

சீனாவும், ரஷ்யாவும் மட்டும்தான் அமெரிக்காவும் தனது கண்டனங்களை சற்று வலுவாகப் பதிவு செய்துள்ளன. இதுபோன்ற வன்மையான கண்டனங்களும்கூட தடித்த தன்மை கொண்டது அமெரிக்காவை ஒன்றும் செய்யாது என்பது உலக வரலாறு அறிந்தது!

அன்று ஈராக்கியர்கள் ஏமாந்தது போல... - இப்போது வெனிசுலா மக்களின் கொண்டாட்ட மனநிலையைப் பார்த்து சமூக வலைதளங்களில் சர்வதேச அரசியல் நிபுணர்கள் பலரும் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

அதில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர், “இன்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள வெனிசுலா மக்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஈராக்கியர்கள் சதாம் ஹுசைன் வீழ்ச்சிக்குப் பின்னரும், லிபியர்கள் கடாஃபி வீழ்ச்சிக்குப் பின்னரும் கொண்டிருந்த கொண்டாட்ட மனநிலைய சற்றே திரும்பிப் பாருங்கள். இப்போது அந்த நாடுகள் என்ன நிலையில் இருக்கின்றன என்பதையும் யோசியுங்கள். அந்த இரண்டு நாடுகளுமே அமெரிக்க கட்டுப்பாட்டில் வெற்று நிலமாக மாறின. விடுவிக்கிறோம் என்ற பெயரில் அமெரிக்க ஏகாதிபத்தியம் இதைத்தான் பல நாடுகளில் செய்திருக்கிறது.

சர்வாதிகார நாடுகளில் நிச்சயம் மாற்றம் வர வேண்டும். ஆனால், அது உள்ளிருந்து எழும் மாற்றமாக இருக்க வேண்டும். படையெடுப்பு அல்லது கூட்டுச் சதியின் விளைவாக ஒரு மாற்றம் நிகழக்கூடாது. அது மக்களுக்கான மாற்றமாக இருக்க வாய்ப்பே இல்லை” என்று கூறியுள்ளார்.

“2003-ல் ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தது. அப்போது ஈராக்கியர்கள் சதாம் ஹுசைன் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். சதாம் ஹுசைன் அணு ஆயுதங்களைத் தயாரிக்கிறார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தான் அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்தது.

அதிருப்தி ஈராக்கியர்களும் ‘வெல்கம் யுஎஸ்’ என்று பதாகைகளுடன் வரவேற்றனர். ஆனால் 2011 வரை ஈராக்கில் அமெரிக்கா பல்வேறு அட்டூழியங்களை நிகழ்த்தியது. லட்சக்கணக்கில் ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர். இறுதியில் எந்த அணு ஆயுதமும் கண்டுபிடிக்கப்படவில்லை. சதாமும் கொல்லப்பட்டார்.

அன்று கொண்டாடிய ஈராக்கியர்களிடம் இன்று சென்று கேட்டால், அவர்கள் அமெரிக்கா மீது அத்தனை வெறுப்புடன் தாங்கள் பட்ட துன்பங்களை நினைவுகூர்வார்கள். ஈராக்கில் இருந்து அமெரிக்கா சென்ற பின்னர், அது ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின் பிடிக்குள் சென்றது.

போர் எளிது, போரை முடிப்பதும் கூட எளிது, ஒரு ஆட்சியைக் கவிழ்ப்பதும், ஒரு சர்வாதிகாரியை வீழ்த்துவதும் கூட எளிது. ஆனால், ஒரு தேசத்துக்கு ஸ்திரத்தன்மையை அளிக்கக்கூடிய அரசை உருவாகச் செய்வது கடினம்” என்று அமெரிக்காவைச் சேர்ந்த திரைப் பிரபலம் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

கட்டுரை உறுதுணை: தி கான்வர்சேஷன்

அச்சத்துக்கு அப்பால்... அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி... வீதிகளில் திரண்ட மக்கள் - ஈரானில் நடப்பது என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in