

வாஷிங்டன்: லாட்டரி கிரீன் கார்ட் முறையை ரத்து செய்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமெரிக்க நாட்டில் தற்போது லாட்டரி கிரீன் கார்ட் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு வந்துள்ளவர்கள் கிரீன் கார்ட் கோரி விண்ணப்பம் செய்வர். அதாவது ஒவ்வொரு ஆண்டும் 50,000 கிரீன் கார்ட் அமெரிக்க அரசு சார்பில் வழங்கப்படும்.
ஆனால், இந்த எண்ணிக்கையை தாண்டி அதிக அளவிலான நபர்கள் கிரீன் கார்ட் கோரி விண்ணப்பிக்கும்போது கம்ப்யூட்டர் அடிப்படையிலான லாட்டரி மூலம் கிரீன் கார்ட் வழங்கப்படும். அதாவது கம்ப்யூட்டரே, லாட்டரி குலுக்கல் அடிப்படையில் இந்த 50 ஆயிரம் பேரைத் தேர்வு செய்து அறிவிக்கும்.
இந்த கிரீன் கார்ட் பெறுபவர்கள் அமெரிக்காவின் குடியுரிமையைப் பெற்றதாக அறிவிக்கப்படுவர். இந்த லாட்டரி கிரீன் கார்ட் முறையை அதிபர் ட்ரம்ப் கடுமையாக எதிர்த்து வந்தார். இந்நிலையில் லாட்டரி கிரீன் கார்ட் முறை ரத்து செய்யப்படுவதாக நேற்று முன்தினம் அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கிறிஸ்டி நோயம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: லாட்டரி மூலம் கிரீன் கார்ட் வழங்கும் முறையின் மூலம் அமெரிக்காவில் நுழைந்தவர்கள்தான் பிரவுன் பல்கலைக்கழகம், எம்ஐடி-யில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு காரணமாக இருந்தனர். எனவே, இனி அதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க லாட்டரி கிரீன் கார்ட் முறை ரத்து செய்யப்படுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதற்கான உத்தரவு அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றப் பிரிவு அமைச்சகத்துக்கு சென்றுள்ளது. கொடூரச் செயல் புரியும் நபர்களை இனி எங்கள் நாட்டில் அனுமதிக்கமாட்டோம். இவ்வாறு அமைச்சர் கிறிஸ்டி நோயம் தெரிவித்தார்.
இந்தியாவுடன் ஒப்பந்தம் நீட்டிப்பு: கடந்த 2015-ம் ஆண்டில் இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிடையே பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்தியாவை மிக முக்கிய பாதுகாப்பு ஒத்துழைப்பு நாடு என அமெரிக்கா அங்கீகரித்து ராணுவ தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பகிரத் தொடங்கியது. இந்த ஒப்பந்தம் தற்போது நிறைவடையவுள்ளது. இதைத் தொடர்ந்து
இரு நாடுகளும் கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்தியாவுடன் பாதுகாப்புத் துறை ஒப்பந்தத்தை நீட்டிக்க வகை செய்யும் மசோதாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். சீனா முன்வைக்கும் சவாலை எதிர்கொள்வதற்கு குவாட் அமைப்பு மூலம் அமெரிக்காவின் ஈடுபாட்டை விரிவுபடுத்தவும் இந்த மசோதா வகை செய்கிறது.