

படம்: ஜெ.மனோகரன்
கோவை: கோவை மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி, கோவை மாவட்டத்தில் மொத்தம் 25,74,608 வாக்காளர்கள் உள்ளனர். 6.50 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 3,117 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதைத் தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் வெளியிட்டார். மாவட்ட தேர்தல் அலுவலர்கள், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரின் தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் கூறியது: வரைவு வாக்காளர் பட்டியலின்படி, கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் தொகுதியில் 2,69,898 வாக்காளர்கள், சூலூரில் 2,93,516, கவுண்டம்பாளையத்தில் 3,77,740, கோவை வடக்கில் 2,78,531, தொண்டாமுத்தூரில் 2,72,946, கோவை தெற்கில் 1,79,308, சிங்காநல்லூரில் 2,54,422, கிணத்துக்கடவில் 2,83,621, பொள்ளாச்சியில் 1,96,375, வால்பாறையில் 1,68,251 வாக்காளர்கள் என மொத்தம் 25 லட்சத்து 74 ஆயிரத்து 608 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 12,43,282 ஆண்கள், 13,30,807 பெண்கள், 519 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.
கடந்த 27.10.2025 நிலவரப்படி மாவட்டத்தில் 32 லட்சத்து 25 ஆயிரத்து 198 வாக்காளர்கள் இருந்தனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு பின்னர் உயிரிழந்த வாக்காளர்கள் 1,19,489 பேர், முகவரியில் இல்லாதவர்கள் 1,08,360 பேர், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் 3,99,159 பேர், இரட்டைப் பதிவுகள் 23,202 பேர், இதர காரணங்களுக்கு 380 பேர் என மொத்தம் 6 லட்சத்து 50 ஆயிரத்து 590 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர்களில் 20.17 சதவீதமாகும்.
மேட்டுப்பாளையம் தொகுதியில் 43,912 பேர், சூலூரில் 45,331 பேர், கவுண்டம்பாளையத்தில் 1,23,971 பேர், கோவை வடக்கில் 71,920 பேர், தொண்டாமுத்தூரில் 76,391 பேர், கோவை தெற்கில் 66,240 பேர், சிங்காநல்லூரில் 86,944 பேர், கிணத்துக்கடவில் 73,187 பேர், பொள்ளாச்சியில் 32,855 பேர், வால்பாறையில் 29,839 பேர் என மொத்தம் 6 லட்சத்து 50 ஆயிரத்து 590 பேர் நீக்கப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 3,117-ல் இருந்து 3,563 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வரைவு பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, உரிமை கோருதல் மற்றும் ஆட்சேபனை மனுக்களை வரும் ஜனவரி 18-ம் தேதி வரை தாக்கல் செய்யலாம். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் 17-ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.