

யூன் சுக் இயோல்
சியோல்: நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் நடத்தாமல், ராணுவ சட்டத்தை தன்னிச்சையாக அமல்படுத்த முயன்ற வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தென் கொரியாவின் அதிபராக இருந்தவர் யூன் சுக் இயோல் (65). இவர் கடந்த 2024-ம் டிசம்பர் மாதம் 3-ம் தேதி நாட்டு மக்களிடம் தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது தென் கொரியாவில் ராணுவ சட்டத்தை அமல்படுத்துவதாக திடீரென அறிவித்தார். நாட்டுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் செயல்படும் சில சக்திகளை வேரோடு எடுத்தெறிய வேண்டும். அதற்காக கடுமையான நடவடிக்கை அவசியம் என்று கூறினார். இது நாட்டில் பெரும் சர்ச்சையை எழுப்பியது. பொதுமக்கள், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து தென் கொரிய நாடாளுமன்றத்தில் யூன் சுக் இயோலை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீதும் அவரது மனைவி மீதும் ஊழல் உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நாட்டில் ராணுவ சட்டத்தை அமல்படுத்த தன்னிச்சையாக முடிவெடுத்த குற்றத்துக்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சியோலில் உள்ள மத்திய மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜி குய் இயான் நேற்று தீர்ப்பளித்தார்.
நீதிபதி தனது தீர்ப்பில் கூறும்போது, ”தனது அரசியல் எதிரிகளை ஒடுக்க, நாடாளுமன்றத்துக்குள் ராணுவ வீரர்களை யூன் சுக் இயோல் அனுப்பி வைத்துள்ளார். சில காலங்களுக்கு நாடாளுமன்றத்தை முடக்கி வைக்கும் அவரது உள்நோக்கம் இதன்மூலம் தெளிவாகத் தெரிகிறது. நாட்டில் ராணுவ சட்டத்தை அறிவித்ததால் சமூக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. எனவே முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.
மேலும், யூன் சுக் இயோல் ராணுவ சட்டத்தை அமல்படுத்துவதற்கு உதவியாக இருந்த முன்னாள் ராணுவ அமைச்சர் கிம் யாங் ஹியூனுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. முன்னதாக யூன் சுக் இயோலுக்கு மரண தண்டனை வழங்கும்படி அரசு தரப்பில் வாதிடப்பட்டது. எனினும், அந்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை.