

வாஷிங்டன்: அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோசப் கென்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இஸ்ரேலின் அழுத்தம் காரணமாகவே டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ஈரான் மீது போரைத் தொடங்கியது என்று அவர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரம்பின் நெருக்கமான அதிகாரிகளில் ஒருவராகக் கருதப்பட்ட ஜோ கென்ட், தனது ராஜினாமா கடிதத்தில் தற்போதைய வெளியுறவுக் கொள்கைகள் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது, “அதிபர் ட்ரம்ப், மிகுந்த ஆலோசனைக்குப் பிறகு, தேசிய பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் இயக்குநர் பதவியிலிருந்து இன்று முதல் விலகுகிறேன். ஈரானில் நடக்கும் இந்தப் போரை எனது மனசாட்சியின்படி என்னால் ஆதரிக்க முடியாது. ஈரான் நமது நாட்டுக்கு எந்த உடனடி அச்சுறுத்தலையும் தரவில்லை. இஸ்ரேல் மற்றும் அதன் சக்திவாய்ந்த அமெரிக்க லாபியின் அழுத்தம் காரணமாகவே நாம் இந்தப் போரைத் தொடங்கினோம் என்பது தெளிவாகத் தெரிகிறது.
2016, 2020, 2024 தேர்தல்களில் நீங்கள் முன்வைத்த வெளியுறவுக் கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். ஜூன் 2025 வரை, மத்திய கிழக்கு நாடுகளின் போர்கள் அமெரிக்க வீரர்களின் உயிரையும் செல்வத்தையும் வீணடிக்கும் ஒரு வலை என்பதை நீங்கள் உணர்ந்திருந்தீர்கள். உங்கள் முதல் ஆட்சியில், ஒரு முடிவில்லாத போருக்குள் சிக்காமல் ராணுவ பலத்தை எப்படிச் சரியாகப் பயன்படுத்துவது என்பதில் நீங்கள் சிறந்த அதிபராக இருந்தீர்கள்.
ஆனால், இந்த ஆட்சியின் தொடக்கத்தில் இஸ்ரேலிய அதிகாரிகளும் அமெரிக்க ஊடகங்களும் சேர்ந்து ஒரு தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டனர். ஈரான் அச்சுறுத்தலாக இருப்பதாக உங்களை நம்பவைத்து, போருக்குத் தூண்டினர். ஈராக் போரின் போது பயன்படுத்தப்பட்ட அதே தந்திரத்தை இப்போதும் பயன்படுத்தி நம்மை ஏமாற்றியுள்ளனர்.
போர்க்களத்திற்கு 11 முறை சென்ற ஒரு வீரனாகவும், இஸ்ரேலால் உருவாக்கப்பட்ட ஒரு போரில் தனது மனைவியைத் தொலைத்தவனாகவும், அமெரிக்க மக்களுக்குப் பயன் தராத இந்தப் போருக்கு அடுத்த தலைமுறையை அனுப்ப என்னால் முடியாது.
ஈரானில் நாம் யாருக்காக என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் நினைத்தால் இந்தத் தவறான பாதையை இப்போதே மாற்றி நாட்டைச் சரியான வழிக்குக் கொண்டு செல்ல முடியும். உங்கள் ஆட்சியில் பணியாற்றியதை கவுரமாக கருதுகிறேன்” இவ்வாறு ஜோசப் கென்ட் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
வளைகுடா பிராந்தியத்தில் போர் 17-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவரே போரின் நியாயத்தன்மை குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளது சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது