

வாஷிங்டன்: இந்தியர்களை அவமதித்த விவகாரத்தில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.
வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு அமெரிக்கா எச்1 பி விசா வழங்குகிறது. ஓராண்டுக்கு 85,000 எச்1 பி விசா மட்டுமே விநியோகிக்கப்படுகிறது.
இதில் 75 சதவீதத்தை இந்தியர்கள் பெறுகின்றனர். இந்த சூழலில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பேசும்போது, “அமெரிக்காவில் எச்1பி விசாவில் பணியாற்றுவோர் அடிமைத் தொழிலாளர்கள். அவர்கள், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை பறிக்கின்றனர்” என்றார்.
அதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்்தது. அமெரிக்காவில் ஆளும் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர்களும் வான்ஸின் கருத்தை வன்மையாகக் கண்டித்தனர்.
இந்நிலையில் மிச்சிகன் மாகாணம், பிளாட் ராக் பகுதியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஜே.டி.வான்ஸ்் பேசியதாவது: எச்1பி விசாவில் பணியாற்றுவோர் குறித்து நான் பேசிய கருத்துகள் தவறானவை.
அதற்காக வருந்துகிறேன். எனது மனைவி உஷா இந்தியாவின் தென்பகுதியை (ஆந்திரா) பூர்விகமாகக் கொண்டவர் ஆவார். அவரையும், எனது இந்திய மாமியார், மாமனாரையும் மனப்பூர்வமாக நேசிக்கிறேன்.
வெளிநாடுகளைச் சேர்ந்த திறன்வாய்ந்த தொழிலாளர்கள் அமெரிக்காவுக்கு வருவதை வரவேற்கிறேன். அதேநேரம் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இரண்டும் சமநிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு ஜே.டி.வான்ஸ் பேசினார்.