இஸ்ரேலில் ஆட்சி அமைக்க ஐசன்கோட்டுக்கு அதிபர் அழைப்பு

இஸ்ரேலில் ஆட்சி அமைக்க ஐசன்கோட்டுக்கு அதிபர் அழைப்பு
Updated on: 
1 min read

ஜெருசலேம்: இஸ்ரேலில் அண்மையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எந்தவொரு கூட்டணிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைக்குமாறு யஷார் கட்சியின் தலைவர் காடி ஐசன்கோட்டுக்கு அதிபர் ஐசக் ஹெர்சாக் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த அக். 27 அன்று நடைபெற்ற தேர்தலில், பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி தனது பெரும்பான்மையை இழந்தது. 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நெதன்யாகுவின் கூட்டணி 53 இடங்களையும், காடி ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 48 இடங்களையும் கைப்பற்றின. எவருக்கும் தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான 61 இடங்கள் கிடைக்கவில்லை.

நாடாளுமன்றக் கட்சிகளுடன் அதிபர் ஐசக் ஹெர்சாக் நடத்திய ஆலோசனையின் போது, இஸ்ரேலின் அரபு சிறுபான்மையின மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு முக்கியக் கட்சிகள் காடி ஐசன்கோட்டுக்கு தங்களது ஆதரவை அளித்தன. இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களில் 67 பேரின் ஆதரவுப் பரிந்துரையைப் பெற்ற ஐசன்கோட்டை ஆட்சி அமைக்க அழைப்பதாக அதிபர் மாளிகை அறிவித்துள்ளது. இதற்கான அதிகார்பூர்வ நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை ஜெருசலேமில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெறுகிறது.

அதிபரின் அறிவிப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள காடி ஐசன்கோட், "இது ஒரு தேசிய அவசரக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டிய தருணம். மக்களின் நம்பிக்கைக்குரிய ஆட்சியை வழங்க அனைத்து முயற்சிகளையும் செய்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ராணுவத் தளபதியான காடி ஐசன்கோட் ஆட்சி அமைத்தால், இஸ்ரேலில் நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்த பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சி முறைப்படி முடிவுக்கு வரும்.

ஆட்சி அமைக்க ஐசன்கோட்டுக்கு 28 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். தேவைப்பட்டால் அதிபர் மேலும் 14 நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்க முடியும். அதற்குள்ளாக 61 உறுப்பினர்களின் ஆதரவை அவரால் திரட்ட முடியாவிட்டால், இஸ்ரேல் மீண்டும் ஒரு பொதுத்தேர்தலை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

இஸ்ரேலில் ஆட்சி அமைக்க ஐசன்கோட்டுக்கு அதிபர் அழைப்பு
போலந்து நாட்டில் பயங்கர துப்பாக்கிச் சூடு: 5 பேர் உயிரிழப்பு

X