

டெல் அவிவ்: ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனியை கொலை செய்வதற்கு பல ஆண்டுகளாக உளவு வேலை பார்த்துள்ளது இஸ்ரேலின் மொசாத்.
ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கடந்த 1989-ம் ஆண்டு முதல் ஆட்சி செய்தார். நாட்டில் அடக்குமுறை, அணு ஆயுத தயாரிப்பு போன்றவற்றை காரணம் காட்டி அவரை அமெரிக்க, இஸ்ரேல் படைகள் கடந்த சனிக்கிழமை குண்டு வீசி கொன்றன.
இந்நிலையில், காமேனியை குறி வைப்பதற்கு முன்பு பல ஆண்டுகளாக இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது தற்போது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலில் காமேனி உயிரிழந்தார். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இஸ்ரேலின் மொசாத்தும், அமெரிக்காவின் சிஐஏ.வும் பல வேலைகளைப் பார்த்து வந்தன.
குறிப்பாக ஈரான் தலைநகர் டெஹ்ரான் நகரம் முழுவதும் உள்ள போக்குவரத்து கேமராக்கள், மொபைல் போன்களை மொசாத் ஹேக் செய்து கண்காணித்து வந்தது. காமேனியின் பங்களா, அவர் செல்லும் இடங்கள், எத்தனை மணிக்கு அவர் அலுவலகத்துக்கு வருகிறார், எப்போது செல்கிறார்.
அவருடைய பாதுகாவலர்கள் யார் யார், அவர்களுக்கு எத்தனை மணி நேர வேலை, அவர்கள் எந்தெந்த ‘ஷிப்ட்’களில் வந்து செல்கின்றனர், குறிப்பாக காமேனியை அழைத்து செல்பவர்கள் யார், அவர்களுடைய முகவரி, குடும்ப விவரம் அனைத்தையும் மொசாத் சேகரித்து வைத்துள்ளது. டெஹ்ரானின் போக்குவரத்து கேமராக்கள் பெரும்பாலும் மொசாத்தின் கண்காணிப்பில்தான் இருந்துள்ளது.
அப்படி கண்காணித்துதான் டெஹ்ரானின் பஸ்தூர் பகுதியில் ஈரான் மூத்த அதிகாரி வந்தபோது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. அங்குதான் காமேனி கொல்லப்பட்டுள்ளார். அந்த தாக்குதலை இஸ்ரேலின் மொசாத் போக்குவரத்து கேமராக்கள் மூலம் நேரடியாக பார்த்துள்ளது.
இப்படி போக்குவரத்து கேமராக்களை ஹேக் செய்து நேரடியாக பல ஆண்டுகள் தீவிரமாக கண்காணித்த பிறகுதான், காமேனி வரும் நேரம், அலுவலகத்துக்கு அவர் வந்தவுடன் அங்கு யார் யாரெல்லாம் வருகின்றனர் என்பதை அறிந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை மாலை ராணுவ தளபதிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்தார் காமேனி. ஆனால், திடீரென காலையில் அந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதை எப்படியோ மொசாத் மோப்பம் பிடித்து அமெரிக்காவுக்கு தகவல் கொடுத்தது. அதன்பிறகுதான் போக்குவரத்து கேமராக்கள் மூலம் கண்காணித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்துவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு காமேனி இருந்த இடத்தில் இஸ்ரேல் ஜாமர்கள் மூலம் இணையதள நெட்வொர்க்கை ஸ்தம்பிக்க செய்துள்ளது. இதன் மூலம் காமேனிக்கு எச்சரிக்கை தகவல் எதுவும் செல்வதை இஸ்ரேல் தடுத்துவிட்டது.
இஸ்ரேலை சேர்ந்த நிபுணர்கள் ஆயிரக்கணக்கான டேட்டாக்களை ஆராய்ந்து துல்லியமாக தகவல்களை அளித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் ஈரானின் 12-க்கும் மேற்பட்ட அணுசக்தி விஞ்ஞானிகள், ராணுவத்தில் உயர் பதவி வகித்தவர்கள் சில மணி நேரங்களில் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர்.
அந்தளவுக்கு இஸ்ரேலின் உளவுப் பிரிவு மொசாத் தகவல்களை சேகரித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேலின் மொசாத் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலிலும் இப்போது நடைபெற்ற தாக்குதலிலும் இஸ்ரேல் பைலட்கள் ‘ஸ்பேரோ’ (சிட்டுக்குருவி)வகை ஏவுகணைகளை பயன்படுத்தினார்கள்.
அந்த ஏவுகணையை 1,000 கி.மீ. தூரத்தில் இருந்து சாப்பாட்டு மேசையை இலக்கு வைத்து கூட எங்களால் தாக்குதல் நடத்த முடியும். எந்த வான் பாதுகாப்பையும் மீறி இந்த ஏவுகணையை செலுத்தி மிக சிறிய இடத்தில் தாக்குதல் நடத்த முடியும்’’ என்றார்.