

பெய்ரூட்: தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தங்கியிருந்த கிராமங்களை இஸ்ரேல் குண்டு வைத்து மொத்தமாக தகர்த்தது.
தெற்கு லெபனான் பகுதியில் உள்ள கிராமங்களில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தங்கியிருந்தனர். இவர்கள் வடக்கு இஸ்ரேல் பகுதியில் அடிக்கடி ராக்கெட் குண்டு வீச்சில் ஈடுபட்டு வந்தனர். இதனால் கடந்த 2 வாரங்க ளாக லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி வந்தது.
காசாவின் ரஃபா, பெய்ட் ஹானன் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை எல்லாம் மக்கள் மீண்டும் வசிக்காதபடி இஸ்ரேல் குண்டு வைத்து தகர்த்தது. தெற்கு லெபனான் எல்லைப் பகுதியில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தங்கியிருந்த டேபெஹ், நகுரா மற்றும் டெயிர் செர்யான் ஆகிய கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளையும் குண்டு வைத்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் இஸ்ரேல் ராணுவத்தினர் தகர்த்தனர்.
இந்த தாக்குதலின் செயற்கைக்கோள் வீடியோவையும் சமூக ஊடகத்தில் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. லெபனான் எல்லையில் உள்ள பல கிராமங்களை இஸ்ரேல் தகர்த்துள்ளதாக லெபனான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் லெபனானுடன் அமைதி ஒப்பந்தம் செய்ய விரும்புவதாகவும், ஆனால் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுடன் எந்த ஒப்பந்தமும் கிடையாது என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். தெற்கு லெபனானின் பல பகுதிகளை ஆக்கிரமிப்போம்.
அங்குள்ள லிதானி ஆறு வரை பாதுகாப்பு மண்டலம் உருவாக்குவோம்.அங்கிருந்து இடம் பெயர்ந்து சென்ற லெபனான் மக்கள் திரும்ப அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் இஸ்ரேல் கூறியுள்ளது. வடக்கு இஸ்ரேலில் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை இந்த நிலை தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.