‘டெக்டானிக் பிளேட்’ நகர்வால் பனிப்பாறைகள் உடைந்ததா? - நேபாள வெள்ளம் குறித்த விஞ்ஞானிகள் பார்வை

‘டெக்டானிக் பிளேட்’ நகர்வால் பனிப்பாறைகள் உடைந்ததா? - நேபாள வெள்ளம் குறித்த விஞ்ஞானிகள் பார்வை
Updated on
4 min read

நேபாளம் - திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்துக்கு, உயரமான மலைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவே முதற்கட்ட காரணமாக இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  ஆனால், டெக்டானிக் பிளேட்கள் (Tectonic Plate) எனப்படும் பூமியடிப் பெரும்பாறைகளின் நகர்வு, ஒன்றின் அடியில் ஒன்று சொருகிக் கொள்வது போன்ற நிகழ்வுகளினால் பனிப்பாறைகள் நொறுங்கி விழுகின்றனவா என்ற கோணத்தில் புவி விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

இமயமலையில் வேகமாக உருகி வரும் பனிப்பாறைகள், மாறிவரும் காலநிலை மற்றும் நீண்டகால டெக்டானிக் பிளேட்களின் ஊடாட்ட இயக்கம் ஆகியவை எவ்வாறு ஒன்றுடன் ஒன்று இணைந்து இத்தகைய பேரழிவுகளை உருவாக்குகின்றன என்பது குறித்து புவி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

சரிந்த பனிப்பாறை, பள்ளத்தாக்கின் அடிப்பகுதியைத் தாக்கியபோது ஏற்பட்ட அதிர்வு, 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு இணையானதாக இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மைய தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வை ஆய்வு செய்த விஞ்ஞானிகளும் தாக்கத்தின் தீவிரத்தைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒரே நேரத்தில் சரிந்த பனிப்பாறைகள்:

டண்டீ பல்கலைக்கழகத்தின் பனிப்பாறை நிபுணர் டாக்டர் சைமன் குக், நேபாளத்தில் உள்ள லாங்டாங் லிருங் சிகரத்துக்கு அருகே இருந்த ஒரு பனிப்பாறையின் கீழ்ப்பகுதி சரிந்திருப்பதைத் தங்கள் குழு கண்டறிந்துள்ளதாக பிபிசி ஆங்கில ஊடகத்தில் தெரிவித்துள்ளார். அந்தச் சிகரம் வெள்ளம் ஏற்பட்ட இடத்திலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பனிப்பாறை முதலில் வடமேற்கு திசையில் சரிந்து, பின்னர் ஆற்றின் நீரோட்டத்துடன் இணைந்து மேற்கு நோக்கி நகர்ந்திருக்கலாம் என்று அவர் மதிப்பிட்டுள்ளார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் பேராசிரியர் மைக் சேர்ல் கூற்றுப்படி, ‘லாங்டாங் லிருங் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இமயமலைப் பகுதியுமே நீண்டகால டெக்டானிக் இயக்கத்தால் படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஒரு பூமி அடிப் பெரும்பாறை மற்றொரு பெரும் பாறையை மேல்நோக்கித் தள்ளுவதால் மலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.

ஒரு காரை உயர்த்துவதற்கு அதன் அடியில் ஜாக்கியை வைத்து மேலே தூக்குவது போன்ற செயலுடன் இதனை ஒப்பிடலாம் அல்லது காட்சிப்படுத்தலாம்.  மலை உயர உயர, அதன் சரிவுகள் மேலும் செங்குத்து ஆகின்றன. இதனால் பனிப்பாறையின் சில பகுதிகள் அவ்வப்போது உடைந்து கீழே விழுவது இயல்பான நிகழ்வு ஆகிறது.

மலை உயர்ந்து கொண்டிருக்கும்போது, பனிப்பாறையும் மேலும் மேலும் செங்குத்தாக மாறுகிறது. இதனால் அதன் சில பகுதிகள் கீழே விழுவது தவிர்க்க முடியாததாகிறது. பொதுவாக இவ்வாறு உடையும் பனிப்பாறைத் துண்டுகள் சிறிய அளவிலேயே இருக்கும். அவை ஆற்றின் பாதையைத் தற்காலிகமாக அடைத்தாலும், பின்னர் அதன் நீரோட்டத்தால் எளிதில் அடித்துச் செல்லப்பட்டுவிடும். ஆனால், இந்த முறை ஏற்பட்டது முற்றிலும் மாறுபட்டதாகத் தெரிகிறது. பனிப்பாறையின் ஒரு பகுதி இல்லாமல், முழுப் பனிப்பாறையும் ஒரே நேரத்தில் சரிந்திருக்கலாம்” என்கிறார் புவி விஞ்ஞானி சேர்ல்.

இது மிகவும் அசாதாரணமான நிகழ்வு. இத்தகைய வெள்ளங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. ஆனால் இவ்வளவு பெரிய அளவில் ஏற்படுவது வழக்கமானதல்ல. எனவே இது பெரிய ஆய்வுக்கு  உரிய விஷயம் என்கின்றனர் பனிப்பாறை ஆய்வு நிபுணர்கள்.

நிலத்தட்டு இயக்கம் காலநிலை மாற்றம் தொடர்பு என்ன?

புதன்கிழமை நிகழ்ந்த இந்தப் பேரழிவுக்குப் பின்னால் இரண்டு வெவ்வேறு இயற்கைச் செயல்முறைகள் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கலாம் என சேர்ல் கருதுகிறார். ஒருபுறம், இமயமலை உருவாகக் காரணமான டெக்டானிக் இயக்கம் தொடர்ந்து மலைகளை உயர்த்திக் கொண்டிருக்கிறது. மறுபுறம், பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதால் பனிப்பாறைகள் வேகமாக உருகுகின்றன.

“இமயமலையை உயர்த்திக் கொண்டிருக்கும் டெக்டானிக் இயக்கமும், அதிகரித்து வரும் வெப்பநிலையால் பனிப்பாறைகள் உருகுவதும் என இரண்டு வெவ்வேறு செயல்முறைகள் இங்கே ஒன்றிணைகின்றன. இந்த இரண்டும் சேர்ந்து, நாம் இப்போது அடிக்கடி எதிர்கொள்ளும் இத்தகைய பேரழிவுகளை உருவாக்குகின்றன.” என்கிறார் அவர்.

காலநிலை மாற்றத்தின் காரணமாக இமயமலையில் உள்ள பனிப்பாறைகளும், பல நூற்றாண்டுகளாக உறைந்த நிலையில் இருக்கும் பெர்மாஃப்ராஸ்ட் எனப்படும் உறைநில மண்ணும் வேகமாக உருகி வருவதாக விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக எச்சரித்து வருகின்றனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சர்வதேச ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு மையமான ICIMOD வெளியிட்ட  ஆய்வு, இந்து குஷ் - இமயமலைப் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் 2000-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது இரண்டு மடங்கு வேகத்தில் பனியை இழந்து வருவதாகக் குறிப்பிட்டது. இதன் விளைவாக வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களின் அபாயமும் அதிகரிக்கிறன.

இந்தியா, சுவிட்சர்லாந்து சந்திக்கும் பேரிடர்கள்:

பனிப்பாறைகள் சரிவதால் ஏற்படும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்கள் சமீப ஆண்டுகளில் இந்தியா, சுவிட்சர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் ஏற்பட்டுள்ளதாக டாக்டர் சைமன் குக் சுட்டிக்காட்டுகிறார்.

2021-ம் ஆண்டு வடஇந்தியாவின் சாமோலி பள்ளத்தாக்கில் இமயமலையின் ஒரு பெரிய பனிப்பாறைப் பகுதி சரிந்தது. அதில் இருந்து பனிப்பாறைத் துண்டுகள், பாறைகள் மற்றும் பெருமளவு நீர் கீழ்நோக்கிப் பாய்ந்ததில் சுமார் 200 பேர் உயிரிழந்தனர்.

பின்னர் விஞ்ஞானிகள் நடத்திய மதிப்பீட்டில், அந்தப் பனிப்பாறைச் சரிவின் தாக்கம் சுமார் 15 அணுகுண்டுகள் வெடிப்புக்கு இணையானதாக இருந்ததாகக் கணிக்கப்பட்டது.

நேபாளத்திலும் இதே பிராந்தியத்தில் கடந்த ஆண்டு திபெத்தில் இருந்த பனிப்பாறை ஏரி உடைந்ததால் பெருவெள்ளம் ஏற்பட்டது. ICIMOD மேற்கொண்ட ஆய்வின்படி, மிக உயரமான மலைப்பகுதியில் இருந்து பனி மற்றும் பாறைகள் ஒன்றாகச் சரிந்து விழுந்து இருக்கலாம்.

அந்தப் பனிப்பாறை  - பாறைச்சரிவு, லெண்டே கோலா ஆற்றுக்குள் மிகப்பெரிய அளவிலான பனி மற்றும் பாறை இடிபாடுகளைத் தள்ளியிருக்கலாம். இது, போதே கோசி ஆற்றின் துணை நதியாகும். இதன் விளைவாக ஆற்றில் திடீரென மிகப்பெரிய நீர்ப்பெருக்கு உருவானது. நீருடன் சேர்ந்து சேறும், பெரும் பாறைகளும் கீழ்நோக்கி அடித்துச் செல்லப்பட்டன.

வெள்ளத்தின் வேகம் எவ்வளவு தீவிரமாக இருந்தது என்பதற்கு ஆற்றின் நீர்மட்டத்தில் ஏற்பட்ட மாற்றமே சாட்சி. வெறும் 30 நிமிடங்களுக்குள் கீழ்ப்பகுதிகளில் உள்ள ஆறுகளின் நீர்மட்டம் 7 முதல் 9 மீட்டர் வரை உயர்ந்ததாக ICIMOD தெரிவித்துள்ளது.

வெள்ளத்தின் வேகத்தையும் தாக்கத்தையும் தாங்க முடியாமல் பல நீர்மட்டக் கண்காணிப்பு நிலையங்கள் அடித்துச் செல்லப்பட்டன, சேதமடைந்தன.

இந்தப் பேரழிவு சில நிமிடங்களில் மட்டும் உருவானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், நிலச்சரிவிலிருந்து வெள்ளம் உருவாகும் வரையிலான செயல்முறைகளுக்கு சில மணி நேரங்களோ அல்லது சில நாட்களோ எடுத்திருக்கலாம் என்றும் பேராசிரியர் மைக் சேர்ல் கூறுகிறார்.

“பெருமளவில் பாறைகள் மற்றும் குப்பைகள் அலைபோல் நகர்ந்திருப்பதைப் பார்க்கும்போது, முதலில் ஒரு நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. அதன் பின்னர் நீர் தேங்கி ஆற்றை அடைத்திருக்கலாம். இறுதியில் அந்தத் தடுப்பு உடைந்து, ஒரு மிகப்பெரிய வெள்ளமாக நீர் பாய்ந்திருக்கலாம்” என்கிறார்  சேர்ல்.

இந்தப் பகுதியில் உள்ள நில அமைப்பும் வெள்ளத்தின் தீவிரத்தை அதிகரித்து இருக்கலாம். லாங்டாங் லிருங் உயரமான இமயமலையின் முகட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. அதன் இருபுறங்களிலும் மிகவும் செங்குத்தான பள்ளத்தாக்குகள் உள்ளன. இவை வெள்ளநீரை ஒரு குறுகிய பாதைக்குள் செலுத்தியதால், நீர் இன்னும் அதிக வேகத்தில் கீழ்நோக்கிப் பாய்ந்திருக்கலாம் என்றும் சேர்ல் விளக்குகிறார்.

 புறக்கணிக்க முடியாத காலநிலை மாற்ற  தாக்கம்:

பனிப்பாறை ஏன் திடீரென சரிந்தது என்பதற்கு இன்னும் உறுதியான பதில் கிடைக்கவில்லை. இருப்பினும், இமயமலைப் பகுதியில் பனிப்பாறைகள் வேகமாக உருகுவது மற்றும் உறைந்த மண் பகுதிகள் பலவீனமடைவது போன்ற மாற்றங்கள், மலைப்பகுதிகளின் நிலைத்தன்மையைப் பாதித்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ICIMOD நிபுணர் முகமது ஃபரூக் ஆசம், பூமியின் உறைந்த பகுதிகளை உள்ளடக்கிய கிரையோஸ்பியரில் ஏற்படும் ஆபத்துகள் அதிகரித்து வருவது முன்பைவிடத் தெளிவாகத் தெரியத் தொடங்கியுள்ளதாகக் கூறுகிறார்.

“இத்தகைய ஆபத்துகளின் பாதிப்புகள் முன்பைவிட இப்போது மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. மாற்றத்தின் வேகம் மிகவும் அதிகமாக உள்ளது.” என்றார்.

ஒரு குறிப்பிட்ட பேரிடர் சம்பவத்துக்கு காலநிலை மாற்றமே நேரடியாகக் காரணம் என்று நிரூபிப்பது கடினம் என்று டாக்டர் சைமன் குக் கூறுகிறார். ஆனால், தொடர்ச்சியாக நிகழும் இதுபோன்ற சம்பவங்களின் ஒட்டுமொத்தப் போக்கைப் பார்க்கும்போது காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைப் புறக்கணிக்க முடியாது என்கிறார்.

ஒரு தனிப்பட்ட நிகழ்வு காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டது என்று உறுதியாகக் கூறுவது கடினம். ஆனால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நிகழும் முறையைப் பார்க்கும்போது, காலநிலை மாற்றம் இதில் தாக்கம் செலுத்தியிருக்கலாம் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

பூமி வெப்பமடைந்து வருவதால் பனிப்பாறைகள் சுருங்கும்; ஆகவே உருகும்; மேலும் சில மலைச்சரிவுகளைத் தாங்கிப் பிடித்திருக்கும் பெர்மாஃப்ராஸ்ட் சூடாகி, உருகி, அதன் உறுதியை இழக்கும்.

இதன் விளைவாக நிலச்சரிவுகள், பாறை - மண் குப்பைகள் பெருக்கெடுத்து ஓடும் நிகழ்வுகள், பனிப்பாறை உருகுநீர் பெருக்கு, பனிப்பாறை ஏரிகள் உடைதல், பனிப்பாறைகள் திடீரெனச் சரிதல் போன்றவை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

புவி வெப்பமடைந்து வருவதால், இந்த உயரமான மலைச் சூழல்களின் இயற்கையான நிலைத்தன்மை இறுதியில் பாதிக்கப்படுகிறது. அதனால் மேலும் அதிகமான நிலச்சரிவுகள், குப்பை வெள்ளங்கள், பனிப்பாறை உருகுநீர் பெருக்குகள், பனிப்பாறை ஏரி உடைப்புகள் மற்றும் பனிப்பாறைச் சரிவுகளை நாம் அதிகம் எதிர்கொள்ள நேரிடும்.

எனினும், புதன்கிழமை நேபாளத்தில் சரிந்த பனிப்பாறை எதனால் சரிந்தது என்பது இன்னும் முழுமையாகத் தெளிவாகவில்லை. நீண்டகால டெக்டானிக் இயக்கத்தால் இமயமலை உயர்ந்து வருவதும், மறுபுறம் காலநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் வேகமாக உருகுவதும் - இந்த இரு காரணிகளும் இணைந்து மலைச் சூழலை எவ்வாறு நிலையற்றதாக ஆக்குகின்றன என்பது குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

‘டெக்டானிக் பிளேட்’ நகர்வால் பனிப்பாறைகள் உடைந்ததா? - நேபாள வெள்ளம் குறித்த விஞ்ஞானிகள் பார்வை
நேபாள வெள்ளத்தில் இதுவரை 547 பேர் உயிரிழப்பு: மீட்புப் பணி நிலவரம் என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in