எண்ணெய்க் கப்பலைத் தாக்கி ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் ஈரானின் 140 இடங்கள் மீது தாக்குதல்

அமீரகம், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது பதில் தாக்குதல்
ஈரான் மீது அமெரிக்கா நேற்றுமுன்தினம் இரவு 3-வது சுற்று தாக்குதலை நடத்தியது. அமெரிக்க போர்க்கப்பல் ஒன்றில் இருந்து ஈரான் நோக்கி பாய்ந்து சென்ற ஏவுகணை.

ஈரான் மீது அமெரிக்கா நேற்றுமுன்தினம் இரவு 3-வது சுற்று தாக்குதலை நடத்தியது. அமெரிக்க போர்க்கப்பல் ஒன்றில் இருந்து ஈரான் நோக்கி பாய்ந்து சென்ற ஏவுகணை.

Updated on
2 min read

புதுடெல்லி: எண்ணெய்க் கப்பலைத் தாக்கி ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால், ஈரானின் 140 ராணுவத் தளங்களைக் குறி வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக அமீரகம், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட மறுத்தது உள்ளிட்ட காரணங்களால், ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் கடந்த பிப்ரவரி 28-ம் தேதிதாக்குதல் நடத்தின. ஒரு மாதத்துக்கு மேல் நீடித்த இந்த மோதல் அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதால் முடிவுக்கு வந்தது.

ஆனால் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் குறிப்பிட்ட வழித் தடத்தில்தான் எண்ணெய்க் கப்பல்கள் கடந்து செல்ல வேண்டும், ஓமன் கடற்கரை வழியாக கடந்து செல்லக் கூடாது என்று ஈரான் கட்டுப்பாடுகள் விதித்தது. ஈரான் உத்தரவை மீறி ஓமன் கடற்கரை வழியாக ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்த 3 எண்ணெய்க் கப்பல்களைக் கடந்த வாரம் ஈரான் தாக்கியது.

இது அமைதி ஒப்பந்தத்தை மீறிய செயல் என்றுகூறி, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கியது. கடந்த வாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா 2 முறை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்ற அதிபர் ட்ரம்ப், ‘‘என்னைப் பொறுத்த வரை அமைதி ஒப்பந்தம் முடிந்து விட்டதாக நினைக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை படுகொலை செய்ய ஈரான் புதுத் திட்டம் தீட்டியுள்ளதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது. ஈரான் உச்சதலைவர் அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்களும் ட்ரம்ப்பை கொல்வோம் என்ற பேனர்களுடன் பங்கேற்றனர்.

இதையடுத்து ‘என்னைக் கொல்ல ஈரான் முயன்றால், அந்நாட்டின் மீது பாய 1,000 ஏவுகணைகள் தயார் நிலையில் இருக்கின்றன’ என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இந்தச் சூழலில் சைப்ரஸ் நாட்டு எண்ணெய்க் கப்பல் ஜிஎப்எஸ் கேலக்ஸி ஈரான் உத்தரவுகளைப் பின்பற்றாமல் மாற்று வழித்தடத்தில் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயன்றது. அந்த கப்பல் மீது ஈரான் கடற்படையினர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் அந்தக் கப்பல் தீப்பற்றியது. இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது.

இதனால் ஈரானின் 140 இலக்குகளைக் குறி வைத்து அமெரிக்கா நேற்று முன்தினம் இரவு 3-வது சுற்று தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் புஷெர், அசலேயா, பந்தர் அப்பாஸ், பந்தர் -இ-டேயர், சிரிக் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை ஒட்டியுள்ள கடலோர ராணுவ முகாம்கள், ஏவுகணைத் தளங்கள், ட்ரோன் மையங்கள், கடற்படை மையங்கள், ஆயுத கிடங்குகள், தகவல் தொடர்பு மையங்கள், கண்காணிப்பு மையங்கள் ஆகியவை அழிக்கப்பட்டன. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் இனிமேல் தாக்குதல் நடத்த முடியாத வகையில் ராணுவத் தளங்களைக் குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவ கட்டுப்பாட்டு மையம் சென்ட்காம் தெரிவித்தது.

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்சேத், எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில், ‘‘ஈரான் மோசமான முடிவைத் தேர்ந்தெடுத்ததற்கான விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது’’ என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தாக்கு: தலுக்குப் பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இவற்றில் பெரும்பாலானவை நடுவானில் இடைமறித்து அழிக்கப்பட்டன. இந்த பதற்றமான சூழ்நிலையில், கச்சா எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஈரான் தூதரை அழைத்து ஓமன் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு கச்சா எண்ணெய் போக்குவரத்து சீரடையும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், ஈரான் - அமெரிக்கா மோதல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா கண்டனம்: இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று விடுத்துள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓமன் கடல் பகுதியில் ஜிஎப்எஸ் கேலக்ஸி கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டிக்கிறோம். இதில் இந்தியர் ஒருவர் மாயமாகி உள்ளார். 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படுவது கவலை அளிக்கிறது.

சர்வதேச விதிமுறைகளின்படி வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது. இதை உடனடியாக நிறுத்த வேண்டும். சுதந்திரமான கப்பல் போக்குவரத்து நடைபெற வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். அப்போதுதான் இப்பகுதியில் அமைதி ஏற்படும். இவ்வாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்திய மாலுமி மாயம்: ஹார்முஸ் ஜலசந்தியை ஓமன் கடற்கரை வழியாக நேற்றுமுன்தினம் கடக்க முயன்ற சைப்ரஸ் நாட்டுக் கப்பல் ஜிஎப்எஸ் கேலக்ஸி கப்பல் மீது ஈரான் நேற்று முன்தினம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் அந்தக் கப்பலின் மேல் தளத்தில் தீப்பிடித்தது. இந்த கப்பலில் 11 இந்திய மாலுமிகள் இருந்தனர். இவர்களில் ஒருவரைக் காணவில்லை. மற்ற 10 பேர் மீட்கப்பட்டதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

<div class="paragraphs"><p>ஈரான் மீது அமெரிக்கா நேற்றுமுன்தினம் இரவு 3-வது சுற்று தாக்குதலை நடத்தியது. அமெரிக்க போர்க்கப்பல் ஒன்றில் இருந்து ஈரான் நோக்கி பாய்ந்து சென்ற ஏவுகணை. </p></div>
“ஒரு மணி நேரத்தில் ஒப்பந்த மீறல்” - ஈரான் மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in