

ஈரான் ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் சிதறி விழும் கொத்து வெடிகுண்டுகள்.
டெல் அவிவ்: இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் அடுக்கடுக்காக கொத்து குண்டுகளை வீசி வருகிறது. சுமார் 8 கி.மீ. பரப்பளவுக்கு இந்த கொத்து குண்டுகள் சிதறி விழுந்து வெடிக்கின்றன.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் இடையே 10-வது நாளாக நேற்றும் போர் நீடித்தது. ஈரானுக்கு ஆதரவாக லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படை இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணைகளை வீசி வருகிறது. இதற்கு பதிலடியாக வான், தரைவழியாக லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் லெபனான் முழுவதும் 339 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய கிழக்கில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் 20 அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீசி வருகிறது. இதுவரை 6 அமெரிக்க வீரர்கள்உயிரிழந்துள்ளனர். மேலும் ஈரான் தாக்குதலில் குவைத்தில் 6 பேர், ஐக்கிய அரபு அமீரகத்தில் 3 பேர், சவுதி அரேபியாவில் 2 பேர், இராக்கில் 2 பேர், ஓமனில் ஒருவர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இஸ்ரேலின் ராணுவ தலைமையகமான டெல் அவிவ் மற்றும் முக்கிய ராணுவ தளங்கள், பல்வேறு நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. வான் வழி தாக்குதலை முறியடிக்க இஸ்ரேல் ராணுவம் சார்பில் அயர்ன் டோம் மற்றும் சி டோம் பாதுகாப்பு கவச அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
ஆனால் கடந்த சில நாட்களாக இஸ்ரேலை குறிவைத்து ஈரான் ராணுவம், தடை செய்யப்பட்ட கொத்து வெடிகுண்டுகளை வீசி வருகிறது. ஈரானின் ஏவுகணை சுமார் 23,000 அடி உயரத்தில் வெடித்து 20 சிறிய குண்டுகளாக பிரிகிறது. இந்த கொத்து குண்டுகள் சுமார் 8 கி.மீ. பரப்பளவு வரை சிதறி விழுகின்றன. இவற்றை நடுவானில் இடைமறித்து அழிப்பது கடினமாக உள்ளது. இதனால் பல நகரங்களில் பெரும் சேதம் ஏற்பட்டு வருகிறது.
டெல் அவிவ் நகரில் மட்டும் 350-க்கும் மேற்பட்ட பொது பதுங்கு அரங்குகள் உள்ளன. டெல் அவிவ், ஹைபா உள்ளிட்ட நகரங்களில் பூமிக்கு அடியில் பிரம்மாண்ட மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. இதன்காரணமாக போர்க் காலங்களில் இஸ்ரேலில் உயிரிழப்பு குறைவாக உள்ளது.