

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியின்றி தேர்வானதை தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகள் சாந்தி, தேன்மொழி ஆகியோரிடம் வெற்றிச் சான்றிதழை பெற்றுக் கொள்ளும் தம்பிதுரை, அன்புமணி, எல்.கே.சுதீஷ் ஆகியோர்.
சென்னை: தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் திமுகவின் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே.சுதீஷ், அதிமுகவின் தம்பிதுரை, பாமகவின் அன்புமணி ஆகிய 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ, கனிமொழி சோமு, அதிமுக சார்பில் தம்பிதுரை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் (அதிமுக கோட்டா) ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் ஏப்.2-ம் தேதியுடன் நிறைவடை கிறது.
இந்த 6 இடங்களுக்கான தேர்தல் கடந்த பிப்.18-ம் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக இரா.சாந்தி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக பி.தேன்மொழி ஆகியோர் நியமிக்கப் பட்டனர். வேட்புமனு தாக்கல் கடந்த பிப்.26-ம் தேதி தொடங்கியது. திமுக கூட்டணியில், திமுக சார்பில் மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, செய்தித் தொடர்பு பிரிவு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகிய 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதிமுக கூட்டணியில் அதிமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை, பாமக தலைவர் அன்புமணி ஆகிய இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்கள் சார்பில் 6 மாற்று வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர். பிரதான வேட்பாளரின் வேட்புமனு ஏற்கப்பட்டால், தன்னிச்சையாக மாற்று வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும். மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் சுவாமிநாதன் மற்றும் 6 சுயேச்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்தனர்.
மனுக்கள் பரிசீலனை கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன. எம்எல்ஏக்களின் முன்மொழிவு கடிதங்கள் இல்லாததால் சுவாமிநாதன் உள்ளிட்ட மற்ற அனைவரது மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
இந்த நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. அதன் பின்னர், திமுக, அதிமுக கூட்டணியின் 6 வேட்பாளர்களும் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி இரா.சாந்தி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
12 மனுக்கள் நிராகரிப்பு: தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் வெற்றி பெற்ற 6 பேரின் பதவிக் காலம் ஏப்.2-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, அந்த பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, 18 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில் 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. முறையாக பூர்த்தி செய்து தாக்கல் செய்யப்பட்ட 6 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
மனுக்களை திரும்பப் பெற இன்று (மார்ச் 9) கடைசி நாள். இன்று மாலை 3 மணி நிலவரப்படி, இத்தேர்தலில் நிரப்பப்பட வேண்டிய 6 இடங்களின் எண்ணிக்கையும், சட்டப்படி செல்லத்தக்கதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களின் எண்ணிக்கையும் சமமாக உள்ளதால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் தேர்தல் நடத்தும் விதிகளின்படி, திருச்சி சிவா (திமுக), கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (திமுக), கிறிஸ்டோபர் திலக் (காங்கிரஸ்), எல்.கே.சுதீஷ் (தேமுதிக), தம்பிதுரை (அதிமுக), அன்புமணி (பாமக) ஆகிய 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
வேட்புமனு பரிசீலனையின்போது, ஒரு வேட்பாளர் மீது ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது. இன்று மாலை 3 மணி வரை எந்த பதிலும் வராத நிலையில், அந்த வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
வெற்றிச் சான்றிதழ்: மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட தம்பிதுரை, அன்புமணி, எல்.கே.சுதீஷ், கிறிஸ்டோபர் திலக் ஆகியோர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர். திருச்சி சிவா, ரவீந்திரன் ஆகிய இருவரும் நாளை பெற உள்ளனர்.