“அமெரிக்காவுக்கு ஒருபோதும் பணியமாட்டோம்” - ட்ரம்புக்கு ஈரான் அதிபர் பதிலடி

“அமெரிக்காவுக்கு ஒருபோதும் பணியமாட்டோம்” - ட்ரம்புக்கு ஈரான் அதிபர் பதிலடி
Updated on
1 min read

நியூயார்க்: ஐநா சபையின் 81-வது பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், ஈரான் ஒருபோதும் அமெரிக்காவின் அழுத்தங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் பணியாது என்றும், தங்களது நாடு பயங்கரவாதத்தின் இரையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஐநா மேடையில் ஈரானை அழித்துவிடுவேன் என்றும் நரகத்துக்கு அனுப்புவேன் என்றும்  எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய பெசெஷ்கியான், “அமெரிக்கா மற்றும் ட்ரம்ப் போன்ற அச்சுறுத்துபவர்கள் ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் பலவந்தமான மொழியை ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஈரான் ஒருபோதும் மண்டியிடாது. தற்காப்புக்காகவே நாங்கள் போராடுகிறோமே தவிர நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல” என்று தெரிவித்தார்.

தனது உரையின் போது, போரின் தொடக்கத்தில் ஈரானின் மினாப் பகுதியில் உள்ள பள்ளி மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் உயிரிழந்த 150-க்கும் மேற்பட்ட பள்ளிப் குழந்தைகளின் புகைப்படத்தைக் கையில் ஏந்தி பெசெஷ்கியான் காட்டினார். 

ஈரானின் உச்சத் தலைவர் படுகொலை செய்யப்பட்டதையும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பொதுமக்கள் பலியானதையும் சுட்டிக்காட்டிய அவர், தங்களைத் தற்காத்துக் கொள்ளவே ஈரான் ராணுவ பலத்தைப் பெருக்கி வருவதாகக் கூறினார்.

ஹார்முஸ் ஜலசந்தியைப் பிற நாடுகள் மீதான தாக்குதலுக்குப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று குறிப்பிட்ட அவர், போர்ச் சூழல் நிலவினாலும் அமைதிக்கான பேச்சுவார்த்தைகளுக்கு ஈரான் எப்போதும் தயாராகவே உள்ளது என்று கூறினார்.

மேலும், அணு ஆயுதங்களை வைத்துள்ள இஸ்ரேலுக்கு விலக்கு அளித்துவிட்டு, ஆற்றல் தேவைக்காக மட்டுமே அணுசக்தியைப் பயன்படுத்தும் ஈரானின் மீது தடைகளை விதிப்பது சர்வதேச சமூகத்தின் இரட்டை நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்று ஐநா சபையில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “ஈரானை மீண்டும் கட்டியெழுப்பி ஒரு பெரிய நாடாக மாற்ற ஒப்பந்தம் செய்வதா? அல்லது இஸ்லாமியக் குடியரசான ஈரானை உடனடியாக அழித்து, அவர்கள் மீண்டும் தலைதூக்க முடியாதபடி நரகத்துக்கு விரட்டுவதா? என்ற பெரிய முடிவை நான் எடுக்க வேண்டியுள்ளது” என்று கூறியிருந்தார். 

“அமெரிக்காவுக்கு ஒருபோதும் பணியமாட்டோம்” - ட்ரம்புக்கு ஈரான் அதிபர் பதிலடி
மாறுபட்ட கருத்துகள் எழுவது இயல்புதான்: தேர்தல் ஆணையம் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in