மாறுபட்ட கருத்துகள் எழுவது இயல்புதான்: தேர்தல் ஆணையம் விளக்கம்

மாறுபட்ட கருத்துகள் எழுவது இயல்புதான்: தேர்தல் ஆணையம் விளக்கம்
Updated on
2 min read

புதுடெல்லி: எந்த ஓர் அமைப்பின் ஆலோசனையின் போதும் மாறுபட்ட கருத்துகள் எழுவது இயல்புதான் என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், இறுதி முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பு முடிவெடுக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாகவே அத்தகைய கருத்துகள் அமைகின்றன என்று விளக்கம் அளித்துள்ளது.

எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பான தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் முடிவுகள், உத்தரவுகளுக்கு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் ஆட்சேபனை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

மேலும், கடந்த 10 மாதங்களில், தங்கள் அனுமதியின்றி பிறப்பிக்கப்பட்ட முடிவுகள், உத்தரவுகளுக்கு தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்துவும், விவேக் ஜோஷியும் 14 முறை ஆட்சேபனை தெரிவித்ததாகவும் தகவல்கள் பரவின.

இதுகுறித்து இன்று விளக்கம் அளித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், ‘அரசியலமைப்பின் 324-வது பிரிவு மற்றும் சட்டரீதியான விதிகளின் கீழ் செயல்படும் அரசியலமைப்பு அமைப்பாக தேர்தல் ஆணையம் உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் சட்டங்கள் மற்றும் ஆணையத்தின் அறிவுறுத்தல்களுக்கு இணங்கவே மேற்கொள்ளப்பட்டது.

ஆணையத்தின் அனைத்து அதிகாரப்பூர்வ உத்தரவுகள், முடிவுகள் மற்றும் நிர்வாக வழிகாட்டுதல்கள் முழுமையான சட்ட அங்கீகாரத்தைக் கொண்டவை. ஒரு முடிவு எடுக்கும் முன்னர் ஆணைய உறுப்பினர்களால் எழுப்பப்படும் செயல்பாட்டு ரீதியான கேள்விகள் மற்றும் கருத்துகள், வாக்காளர் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட நிர்வாக நடைமுறையின் ஒரு பகுதியாகும். ஆணையர்களால் வழங்கப்பட்ட ஆலோசனைகள் தேர்தல் செயல்முறைகளை மேலும் மேம்படுத்துவதற்காகவே இருந்தன.

எந்த ஓர் அமைப்பிலும் கலந்தாலோசனையின்போது மாறுபட்ட கருத்துகள் எழுவது இயல்பானதுதான். இறுதி முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பு, முடிவெடுக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாகவே அவை அமைகின்றன. மூன்று ஆணையர்கள் மட்டுமல்ல, ஆணையத்தின் ஒவ்வொரு அதிகாரியும் தேர்தல் முறையை மேம்படுத்துவதற்காக தங்கள் ஆலோசனைகளை ஆணையத்துக்கு வழங்க முழு அதிகாரம் பெற்றவர் ஆவர்.

சமீபத்திய மாதங்களில் தேர்தல் ஆணையம் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது, சுமார் 40 புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பல தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

இந்த முடிவுகள் அனைத்தும் கடந்த ஓராண்டில் ஆணையத்தின் ஒருமித்த முடிவுகளின் விளைவாக எடுக்கப்பட்டவை. ஆனால், கடந்த 10 மாத காலத்தில் இடம்பெற்ற குறிப்பிட்ட சில உள் குறிப்புகள் அல்லது மாறுபட்ட கருத்துகளை மட்டும் முன்னிலைப்படுத்துவது முழுமையான உண்மையை வெளிப்படுத்தாது.

நமது ஜனநாயகத்தை முன்னேற்றுவதில் தனது முக்கியப் பங்கை உணர்ந்து, இந்தியத் தேர்தல் ஆணையம் தனது அரசியலமைப்பு கடமைகளை முழுமையான நேர்மையுடன் நிறைவேற்றுவதில் முழு உறுதியுடன் உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ‘ஞானேஷ் குமாரை பணி இடைநீக்கம் செய்து, எஸ்ஐஆர் நடைமுறையை நிறுத்த வேண்டும். பிஹார் மற்றும் பல இடங்களில் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும்’ என்று கபில் சிபல் வலியுறுத்தி இருந்தார்.

இதே கருத்தை வெளியிட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் எம்.பி மனிஷ் திவாரி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கட்சியின் ஜோரான பிரிட்டஸ் ஆகியோர், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்கவும் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

மாறுபட்ட கருத்துகள் எழுவது இயல்புதான்: தேர்தல் ஆணையம் விளக்கம்
பாலியல் துன்புறுத்தல் புகார்: தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க தினகரன் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in