

புதுடெல்லி: வடக்கு அரபிக் கடலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடற்படையின் போர்க் கப்பல் மீது பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் மோதியது தொடர்பாக, அந்நாட்டு தூதரகத்தின் பொறுப்பு அதிகாரியை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது.
வடக்கு அரபிக் கடலில் நேற்று முன்தினம் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடற்படையின் போர்க் கப்பலை நோக்கி பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் ஒன்று அதிக வேகத்தில் மோதியது. இந்த சம்பவத்தில் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
எனினும், இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரக பொறுப்பு அதிகாரியை(சாத் வார்ரைச்), வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அப்போது,“கடலில் பாகிஸ்தான் கடற்படைப் பிரிவுகள் மேற்கொண்ட ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் தொழில்முறையற்ற நடவடிக்கை காரணமாக, இந்தியக் கடற்படைப் பிரிவுடன் மோதல் ஏற்பட்டது” என்று அவரிடம், இந்தியா கடும் எதிர்ப்பை பதிவு செய்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனினும், பாகிஸ்தான் கடற்படைக் கப்பலின் நடவடிக்கை, 1991-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகள் மற்றும் படை நகர்வுகள் குறித்த முன்கூட்டிய தகவல் அளிக்கும் ஒப்பந்தத்தின் 10-வது பிரிவுக்கு முரணானது என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், இரு நாட்டு ஒப்பந்த விதிகளை மதித்து, உரிய கவனத்துடன் அனைத்து ராணுவப் பிரிவுகளும் செயல்பட வேண்டியதன் அவசியத்தை பாகிஸ்தான் அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு அந்நாட்டு பொறுப்பு அதிகாரியிடம் இந்தியா அறிவுறுத்தியது.