

வாஷிங்டன்: ஈரான் மீது 2 வார காலத்துக்கு தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரானும் இந்த தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், இரு தரப்புக்கும் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்தத்துக்கு இந்தியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் உலகின் முக்கிய ஜலசந்தியான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவைத்துள்ளது.
இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கப்பல்கள் உலகின் பிற நாடுகளுக்கு செல்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் சர்வதேச சந்தைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக பல்வேறு நாடுகள் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.
இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அனைத்து கப்பல் போக்குவரத்துக்காக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு காலக்கெடு விதித்தார். இந்தக் காலக்கெடு நேற்று அதிகாலை 5.30 மணியோடு நிறைவடைய இருந்தது. இந்த சூழலில், ஈரானுக்கு விதித்த காலக்கெடுவை 2 வாரங்களுக்கு நீட்டிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி, ஈரான் மீதான தாக்குதலை 2 வார காலத்துக்கு நிறுத்தி வைக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் அளித்தார். மேலும் இது ஒரு போர் நிறுத்தம் என்றும் அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதைத் தொடர்ந்து போர் நிறுத்தம் செய்யப்படும் இந்த 2 வாரங்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கவும் ஈரான் சம்மதித்துள்ளது.
இதைத் தொடர்ந்து இடைக்கால போர் நிறுத்தம் செய்ய உதவியதற்காக பாகிஸ்தானுக்கு ஈரான் நன்றி தெரிவித்துள்ள நிலையில், நிரந்தர போர் நிறுத்தத்துக்காக ஏப்ரல் 10-ம் தேதி இஸ்லாமாபாத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ஏற்பாடு செய்துள்ளது. இந்த போரில் பாகிஸ்தான் வெளிப்படையான மத்தியஸ்தராக அறியப்பட்டாலும் பின்னணியில் சீனாவின் பங்கு இருப்பதும் தெரியவந்துள்ளது.
ட்ரம்ப் அறிவிப்பு
போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனீரின் கோரிக்கையை ஏற்று ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி வைக்கிறேன். 2 வார காலத்துக்கு ஈரான் மீது தாக்குதல் மேற்கொள்ள மாட்டோம். ஹார்முஸ் ஜலசந்தியை முழுவதுமாக, உடனடியாக மற்றும் சரக்கு கப்பல்கள் பாதுகாப்பாக கடக்க வேண்டும்” என சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது ‘‘உலக அமைதிக்கு இது ஒரு மகத்தான நாள். ஈரானும் இதைத் தான் விரும்புகிறது. அவர்களுக்குப் போதும் என்றாகிவிட்டது. மற்ற அனைவருக்கும்கூட அதே நிலைதான். ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கையாள்வதில் அமெரிக்கா உதவும். அங்கு ஏராளமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் நடைபெறும். பெரும் பொருளாதார ஆதாயத்தை ஈட்ட முடியும். ஈரான் தனது மறுசீரமைப்புப் பணிகளைத் தொடங்க முடியும்’’ என்றார்.
இதைத் தொடர்ந்து, ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் இந்த 2 வார கால போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறும்போது, ‘‘எங்களுக்கு எதிரான தாக்குதல் நிறுத்தப்பட்டால் நாங்கள் மேற்கொள்ளும் தாக்குதலும் நிறுத்தப்படும். ஈரான் புரட்சிகர இஸ்லாமிய படையுடன் இணைந்து ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து உறுதி செய்யப்படும்’’ என அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் ஆதரவு
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது. போர் நிறுத்த அறிவிப்புக்காக சுமார் 11 மணி நேரம் இடைவிடாது பாகிஸ்தான் பணியாற்றியதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. உலக வல்லரசு நாடுகள் போர் நிறுத்தம் சார்ந்த முயற்சிகளை முன்னெடுக்காத சூழலில் பாகிஸ்தான் இதை மேற்கொண்டிருந்தது கவனிக்கத்தக்கது.
ஈரான் மீது தாக்குதல்
இந்நிலையில் சண்டை நிறுத்தத்துக்கு இடையே, ஈரானின் லவன் தீவில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது நேற்று காலை 10 மணியளவில் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. சண்டை நிறுத்தத்துக்கு இடையே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. எதிரி நாடு தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறியது. ஆனால், தாக்குதல் நடத்தியது அமெரிக்கப்படையா அல்லது இஸ்ரேலா எனத் தெரியவில்லை. இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
யுரேனியம் செறிவூட்டக் கூடாது: அமெரிக்கா நிபந்தனை
யுரேனியத்தை செறிவூட்டும் பணியைத் தொடங்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளை ஈரானுக்கு அமெரிக்கா விதித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது: போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் அணு ஆயுதங்களைத் தயாரிக்க உதவும் யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் நடத்தக்கூடாது.
இந்த விஷயத்தில் ஈரானுடன், அமெரிக்கா நெருக்கமாக இணைந்து செயல்படும். ஈரானில் மிகவும் ஆழத்தில் புதைக்கப்பட்டுள்ள அனைத்து அணுசக்தி பொருட்களையும் தோண்டி எடுத்து அமெரிக்கா அகற்றும். ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள், தடைகளில் இருந்து நிவாரணம் அளிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அந்த 15 அம்சங்களில் இருந்து பலவற்றுக்கு ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா வரவேற்பு
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் இடையிலான போர் நிறுத்தத்துக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தத்தை இந்தியா வரவேற்கிறது.
இது மேற்கு ஆசியாவில் நிலையான அமைதிக்கு வழிவகுக்கும். மத்திய கிழக்கு போர் உலகளாவிய எரிசக்தி விநியோகம், வர்த்தக வலைப்பின்னல்களை சீர்குலைத்துள்ளது. ஆகவே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தடையற்ற கப்பல் போக்குவரத்தை எதிர்பார்க்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளது.